Minister Duraimurugan: விவசாயிகள் பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம் - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் எத்தனை முயற்சிகள் எடுக்க முடியுமோ, அத்தனையும் எடுப்போமென நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரம்:
காவிரியில் 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேற்று பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடகா அரசு இன்று மனு அளித்துள்ளது. இதற்கிடையே சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
”காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது, அது கர்நாடகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை நாம் பார்த்த தெரிந்து கொள்ள வேண்டும். இறுதி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது தான்.
21ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது, அதற்குள் கர்நாடகத்தின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும், பிறகு அந்த வழக்கில் நம்மை இணைத்துக் கொண்டு நமது வழக்கறிஞர்கள் பேசுவார்கள். அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுமா என்ற கேள்விக்கு, உடனடியாக கூட்டப்படும் என்று சொல்ல முடியாது. வரும் 21ம் தேதி வழக்கில் என்ன நிலைமை ஏற்படுகின்றது என்பதை பொறுத்து அடுத்த கட்டமாக அனைத்து கட்சி கூட்டம் குறித்து யோசிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுக்குழு:
மேலும், “ அதிகாரிகளை நேரில் ஆய்வு செய்வது குறித்து தாராளமாக கோரிக்க வைப்போம். உச்ச நீதிமன்றமே நேரடியாக குழு அமைத்து போதிய நீர் இருப்பு இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடலாம். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் என கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, காவிரி பிரச்சனை என்று ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இதே நிலைமைதான். முதலில் நடுவர் மன்றத்தை கர்நாடக ஏற்றுக்கொள்ளவில்லை.
நடுவர் மன்றத்தை நாம் பெற்றோம், நடுவர் மன்றத்தில் இடைக்கால தீர்ப்பு கேட்டோம், அதை கொடுக்கக் கூடாது என கர்நாடகா பேசியது, தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சென்று மேலாண்மை வாரியத்திற்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வழங்கினோம். அரசிதழில் வெளியிடக் கூடாது என்று சொன்னார்கள், ஒவ்வொரு அங்குலத்திலும் அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றார்கள். அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய உரிமைகளை பெற்றுக் கொண்டுதான் வந்திருக்கின்றோம்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்..