Criminal Cases On MP's: நாட்டில் 40% எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்கு, பீகார் முதலிடம்.. தமிழ்நாடு? - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 சதவிகிதம் பேர் மீது, குற்றவழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
குற்றவழக்குகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், மாநில அளவில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஆய்வு:
தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களில் வேட்பாளர்களின் தனிநபர் விவரங்கள், சொத்து விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அவர்கள் மீது உள்ள வழக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். இந்த வேட்பு மனுக்களை ஆய்வு செய்து, எம்பிக்கள், எம்எல்எல்கள் தொடர்பான பல்வேறு விவரங்களை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வழங்கி வருகிறது. அந்த வகையில். தேசிய தேர்தல் கண்காட்சி அமைப்புடன் சேர்ந்து நாடு முழுவதும் உள்ள 776 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 763 பேரின் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு, அதுதொடர்பான முடிவுகளை ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.
40% எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்கு:
ஆய்வறிக்கையின்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 40 சதவிகித எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துளது. அவர்களில் 25 சதவிகிதத்தினர் மீது, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற மோசமான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38.33 கோடி என்றும், 53 பேர் பில்லியனர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
பீகார் முதலிடம்..
ஆய்வின்படி, 763 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 306 பேர் (40 சதவிகிதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 194 பேர் (25 சதவிகிதம் பேர்) மீது மோசமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. இரு அவைகளின் உறுப்பினர்களில், கேரளாவைச் சேர்ந்த 29 எம்.பி.க்களில் 23 பேர் (79 சதவிகிதம்), பீகாரில் இருந்து 56 எம்.பி.க்களில் 41 பேர் (73 சதவிகிதம்), மகாராஷ்டிராவில் இருந்து 65 எம்.பி.க்களில் 37 பேர் (57 சதவிகிதம்), தெலங்கானாவைச் சேர்ந்த 24 எம்.பிக்களில் 13 பேர் (50 சதவிகிதம்) மற்றும் டெல்லியை சேர்ந்த 10 எம்.பிக்களில் 5 பேர் தங்கள் மீது குற்றவழக்குகள் இருப்பதை தேர்தலுக்கான பிரமாணப்பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மோசமான வழக்குகள்:
பீகாரில் இருந்து 56 எம்.பி.க்களில் 28 பேர் (50 சதவிகிதம்), தெலங்கானாவில் இருந்து 24 எம்.பி.க்களில் ஒன்பது பேர் (38 சதவிகிதம்), கேரளாவின் 29 எம்.பி.க்களில் 10 பேர் (34 சதவிகிதம்), 65 எம்.பி.க்களில் 22 பேர் (34 சதவிகிதம்), மகாராஷ்டிராவில் 65 எம்.பிக்களில் 22 பேர் (34 சதவிகிதம்) மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 108 எம்.பி.க்களில் 37 (34 சதவீதம்) பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
கட்சி வாரியான விவரம்:
பாஜகவின் 385 எம்.பி.க்களில் 139 பேர் (36 சதவிகிதம்), காங்கிரஸின் 81 எம்.பி.க்களில் 43 பேர் (53 சதவிகிதம்), திரிணாமுல் காங்கிரசின் 36 எம்.பி.க்களில் 14 பேர்(39 சதவிகிதம்), RJD இலிருந்து 6 எம்.பி.க்களில் 5 பேர்(83 சதவீதம்) , CPI(M-ன் 8 MP-களில் 6 பேர் (75 சதவிகிதம்), ஆம் ஆத்மியின் 11 எம்.பிக்களில் 3 பேர் (27 சதவிகிதம்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 31 எம்.பிக்களில் 13 பேர் (42 சதவிகிதம்) மற்றும் தேசியவாத காங்கிரசின் 8 எம்.பிக்களில் 3 பேர் (38 சதவிகிதம்) ) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பாஜகவின் 385 எம்.பி.க்களில் 98 பேர் (25 சதவிகிதம்) , காங்கிரஸின் 81 எம்.பி.க்களில் 26 பேர் (32 சதவிகிதம்), திரிணாமுல் காங்கிரஸ் 36 எம்.பி.க்களில் 7 பேர் (19 சதவிகிதம்), RJD-ன் 6 எம்.பி.க்களில் 3 பேர் (50 சதவிகிதம்) CPI(M-ன் 8 எம்.பிக்களில் 2 பேர்(25 சதவிகிதம்), ஆம் ஆத்மியின் 11 எம்.பிக்களில் ஒருவர் (9 சதவிகிதம்), ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் 31 எம்.பி.க்களில் 11 பேர் (35 சதவிகிதம்) மற்றும் தேசியவாத காங்கிரசின் 8 எம்.பிக்களில் 2 பேர் (25 சதவிகிதம்) ) மீதும் கடுமையான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவழக்குகள் தொடர்பான இந்த ஆய்வறிக்கையில் தமிழக எம்.பிக்கள் தொடர்பான தரவுகள் எதுவும் இடம்பெறவில்லை.