மகளுக்காக 30 ஆண்டுகள் ஆணாக வாழ்ந்த பேச்சியம்மாள்: நெகிழ்ச்சிப் பின்னணி!
பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்ததால் , முத்து மாஸ்டர் என அழைக்கப்படுகிறார். தனது முத்து என்னும் செயற்கை பெயராலேயே ஆதார் கார்டும் வைத்திருக்கிறார்
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியை அடுத்த காட்டுநாயக்கன் பட்டி பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் 30 ஆண்டுகளாக ஆணாக வாழ்ந்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேச்சியம்மாளுக்கு அவரது 20 வயதில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில், அவரது கணவர் திருமணமான 15 நாட்களிலேயே உயிரிழந்துள்ளார். இளம் வயதிலேயே கைம்பெண்ணான பேச்சியம்மாளுக்கு ஆறுதலாக அவரது வயிற்றில் பெண் குழந்தை உருவாகியிருக்கிறது. வாழ்க்கையின் ஆதாரமாக அக்குழந்தையை எண்ணியவர் குழந்தைக்காக வாழத் தொடங்கியிருக்கிறார். ஆனால் இளம்பெண்ணான அவரை மறுமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.
அது பிடிக்காத பேச்சியம்மாள் வேறு ஊருக்குக் குழந்தையுடன் இடம்பெயர்ந்துள்ளார். ஆனால் அங்கு அவருக்கு பாலியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடிவு செய்த அவர், தனது சிகை அலங்காரத்தை மாற்றி, வேட்டி சட்டை அணிந்துகொண்டு ஆணாகவே மாறியுள்ளார். மேலும் அண்ணாச்சி என அந்த ஊரில் அழைக்கப்பட்டிருக்கிறார்., மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் , அங்கு முத்து என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
ஹோட்டல், டீக்கடை, பெயின்டிங் மற்றும் கடினமான கூலி வேலை என எதுவாக இருந்தாலும் பேச்சியம்மாள் பழகிக்கொண்டார். பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்ததால் , முத்து மாஸ்டர் என அழைக்கப்படுகிறார். தனது முத்து என்னும் செயற்கை பெயராலேயே ஆதார் கார்டும் வைத்திருக்கிறார் பேச்சியம்மாள். பேருந்து தொடங்கி கட்டணக் கழிப்பிடம் வரை அனைத்தும் ஆண்கள் வரிசையைத்தான் பின்பற்றியிருக்கிறார்.
தனது பெண் குழந்தையைப் படிக்க வைத்து மணம் முடிக்கும் வரை தனது அடையாளத்தை யாருக்கும் தெரியாமலேயே ரகசியமாக வைத்திருக்கிறார் பேச்சியம்மாள். “கணவன் தொட்ட உடம்பை வேறு யாரும் தொடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஆணாகவே மாறிவிட்டேன் ...“ என பார்ப்பவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார் பேச்சியம்மாள்.
இளம் வயதில் எல்லா வேலைகளையும் செய்த தனக்கு , 50 வயதாகிவிட்டதால் தற்போது எந்த வேலையும் செய்ய முடிவதில்லை என்றும் 100 நாட்கள் வேலை திட்டத்தில்தான் தனக்கு 100 ரூபாய் கிடைப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார். எனது குடும்பத்தில் நான் ஆணாக மாறியதில் எந்த எதிர்ப்பும் இல்லை எனக் கூறும் பேச்சியம்மாள், தனது குடும்பத்தில் விசேஷ நாட்களில் கூட தனக்கு வேஷ்டி சட்டை எடுத்து கொடுப்பார்கள் என்கிறார்கள் .
ஆண்களிடம் இருந்து தப்பிக்கத்தான் இப்படி மாறினேன் எனக் கூறும் பேச்சியம்மாள், எந்தவொரு ஒழுக்கமான பெண்ணையும் தவறாகப் பேசிவிடாதீர்கள். அக்கா, தங்கையாக நினையுங்கள் எனப் பல ஆண்களுக்கு அறிவுரை செய்திருக்கிறேன் எனப் பேச்சியம்மாள் தெரிவித்தார்.