‛எனக்கு அவ்ளோ சப்போர்ட் பண்ணுவாரு சார்...’ அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட ஒரே சாமானிய பெண்ணின் உருக்கம்!
Vidyasagar Death: ‛‛வேலை செய்பவர்கள், வேலை செய்யாதவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல், அப்போது எனக்காக அவர் பேசினார்’’
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவைத் தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை மீனாவில் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் அர்பன் கம்பெனியின் பணியாளர் அம்பிகா, நடிகை மீனா வீட்டிற்குள் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வந்தார். அவரிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்ட போது, அவர் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
‛‛நான் அர்பன் கம்பெனியில் ஆன்லைன் சர்வீஸில் பணியாற்றுகிறேன். மாதந்தோறும் வீடு சுத்தம் செய்யும் பணிக்காக நடிகை மீனா, எங்களிடம் ஆன்லைனில் புக் செய்வார். நான் தான், அவரது வீட்டை சுத்தம் செய்யும் பணிக்காக வந்து செல்வேன். அவ்வாறு வரும் போது தான், எனக்கு வித்யாசாகர் சாரை தெரியும். அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை. ஆனால், அவர் எனக்காக ஒரு முறை ஆதரவு அளித்து பேசினார். அவர் பேசியதை என்னால் மறக்கவே முடியாது.
அதனால் தான், நான் இங்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரோட இழப்பு தாங்க முடியாமல் தான் இங்கு வந்தேன். நான் முறை லேடர் தூக்கிக் கொண்டு வந்தேன். அப்போது வீட்டு காவலியிடம் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், எனக்காக காவலாளிடம் சப்போர்ட் செய்து பேசினார். ஒரு பெண்ணாக வெயிட்டான பொருளை தூக்கிக் கொண்டு வருகிறார் என அவர் எனக்கு ஆதரவாக பேசினார். வேலை செய்பவர்கள், வேலை செய்யாதவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல், அப்போது எனக்காக அவர் பேசினார்.
அவர் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நமக்காக பேசுகிறாரே என சந்தோசப்பட்டுக் கொண்டேன். இப்போது அவரை இழந்துவிட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால் தான் அஞ்சலி செலுத்த வந்தேன். நேரில் போய் மீனா மேடத்தை பார்த்தேன். உடஞ்சு போயிருந்தாங்க. என்னை பார்த்து வணக்கம் போட்டு, வாங்கன்னு சொன்னாங்க. சாரை பார்த்ததும் என்னால தாங்கிக்க முடியல.
அப்பா இல்லாத பொண்ணு தான் நான். அந்த கஷ்டம், சாரோடு சடலத்தை பார்த்ததும் தான் தோணுச்சு. பாவம் அந்த குழந்தை. சாரை கடைசியாக பார்த்து இரண்டு மாதம் ஆச்சு. ஆனால், அவருக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன். இன்று காலையில் தகவல் கேள்விபட்டதும், என்னால தாங்க முடியல. என் கணவர் தான், தகவலை என்னிடம் தெரிவித்தார். அவர் கூறியதுமே, இங்கு கிளம்பி வந்து, மீனாவை நேரில் சந்தித்து , என் இரங்கலை தெரிவித்தேன்,’’
என்று அந்த பேட்டியில் ஏபிபி நாடு இணையத்திற்கு பணியாளர் அம்பிகா தெரிவித்தார்.