Vaiko: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.. தவெக பக்கம் தாவும் மதிமுக.. திமுக மீது சரமாரி அட்டாக்!
மதிமுக தொண்டர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என குழம்பிக் கொள்ள வேண்டாம். நடப்பவை எல்லாம் இனி நல்லதாகவே நடக்கும். இனி எடுக்க போகும் முடிவுகள் அனைத்தும் மதிமுகவிற்கு மகுடம் சூட்டும் வகையில் அமையும் என வைகோ கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தொண்டர்கள் மனவேதனையில் இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லிக்குப்பம் மதிமுக நகர செயலாளர் ஆதித்யா-ரமா திருமண வரவேற்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனை காலமெல்லாம் நீங்கிவிட்டது. 32 ஆண்டுகளைக் கடந்துள்ள மதிமுக எத்தனையோ சவால்களை கடந்திருக்கிறது. பனிக்காலம் நமக்கு நீங்கிவிடும் வேளை நெருங்கி விட்டது. மதிமுகவை வசந்த காலம் வரவேற்க தயாராகி விட்டது என தெரிவிக்கிறேன்.
மதிமுக தொண்டர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என குழம்பிக் கொள்ள வேண்டாம். நடப்பவை எல்லாம் இனி நல்லதாகவே நடக்கும். இனி எடுக்க போகும் முடிவுகள் அனைத்தும் மதிமுகவிற்கு மகுடம் சூட்டும் வகையில் அமையும். நம் உரிமைகளுக்காக போராடுகிற இயக்கம் மதிமுக என்கிற உணர்வை தமிழக மக்கள் பெறுவார்கள். தொடர்ந்து முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து மதிமுக போராடி வருகிறது.
ஜூன் 26 ஆம் தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. நம் கட்சிக்கான ஒளிமயமான எதிர்காலம் என் கண்களுக்கு தெரிகிறது தொண்டர்கள் மனவருத்தத்தில் உள்ளனர். அவர்கள் மனதில் காயங்கள் உள்ளதை அறிவேன். கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்று இருந்தது. இதில் நமக்கு போதுமான சீட் வழங்கப்படவில்லை. அதேபோல் தனிச் சின்னத்திலும் போட்டியிட முடியவில்லை. திமுக கூட்டணியில் இருந்த மதிமுகவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தொண்டர்கள் மனவேதனையில் உள்ளனர். எனவே பொது குழுவில் நல்ல முடிவு எடுக்க உள்ளோம்” என வைகோ கூறினார்.
Also Read: DVAC Raid: ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடிவு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெற்று இருந்தது. இதில் அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவை அனைத்திலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் நின்றனர். ஆரம்பத்தில் இதற்கு மதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக கடும் அழுத்தம் கொடுக்கவே வேறு வழியின்றி 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் அந்த முடிவு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு நான்கு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் நிற்பார்கள் என வைகோ அறிவித்தார். இந்த நிலையில் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.
ஆனால் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு இல்லாமல் தவித்த தமிழக வெற்றிக்கழக அரசுக்கு திமுக கூட்டணியில் தங்களது சின்னத்தில் போட்டியிட்ட பிற அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மூன்று கட்சிகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் மதிமுகவால் தவெகவுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவிக்க முடியவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முனைப்பில் மதிமுக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















