மகளிர் உரிமை தொகை திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
மகளிர் உரிமை தொகை திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு, மீனவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் மீனவர்களுக்காக அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தற்போது திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை, நிதியையும் குறைத்துவிட்டனர். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தைக் கூட திமுக அரசு முறையாக வழங்கவில்லை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 1058 பேருக்கு இதுவரை தடைகால நிவாரணம் வழங்கப்படவில்லை. இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வருதற்கான அனைத்து செலவுகளையும் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசே செய்து வந்தது.
ஆனால், திமுக ஆட்சியில் படகுகளுக்கு 1200 லிட்டர் டீசல் போடுவது, உள்ளிட்ட செலவுகளையும் மீனவர்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் அரசியல் அமைப்பின்படி செயல்பட வேண்டும். ஆனால், ஆட்சி குறித்தும், அரசை பற்றியும் விமர்சனம் செய்யும் அதிகாரம் அவருக்கு உள்ளது. 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக அண்ணாமலை கூறியுள்ளார்.
2 கோடி இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வீடு தேடி வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இன்று ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என்று அரசு அறிவித்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். இதனால் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக இது மாறப்போகிறது.
Watch Video: இதோட 17-வது முறை... வார்னரை வாட்டி வதைக்கும் பிராட்..! விரைவில் உலக சாதனை..?
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொல்லியவர்கள் முக்கியமான துறைகளில் கூட காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை" என்றார். முன்னதாக தரங்கம்பாடி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அப்பகுதி மீனவர்கள் பட்டாசு வெத்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செய்லாளர் எஸ்.பவுன்ராஜ், அதிமுக நிர்வாகிகள், தரங்கம்பாடி உள்ளிட்ட மீனவப்பஞ்சாயத்தார் உடனிருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.