சிங்கபூருக்கு போலி விசா வழங்கி 51 லட்சம் மோசடி - பாஜக ஒன்றிய செயலாளர் மீது 99 பேர் போலீசில் புகார்
கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டிற்கும் அனுப்பாமல் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் பணத்தை கேட்டு வந்தவர்களை ஆனந்தராஜ் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் கேலக்ஸி டிராவல்ஸ் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கொத்தங்குடி, வேப்பூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 99 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்வதற்காக தலா ரூபாய் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் செலுத்தி உள்ளனர். 3 மாதத்தில் அனைவரையும் சிங்கப்பூர் நிறுவத்தில் வேலைக்கு அனுப்புவதாகவும், இல்லையென்றால் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ஆனந்தராஜ் ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், வேலை வாய்ப்பு தாமதம் ஏற்பட்டது குறித்து பணம் கொடுத்தவர் கேள்வி கேட்க அவர்களுக்கு போலியாக சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான விசாவையும் வழங்கியதாகவும், அந்த விசாவை பரிசோதனை செய்ததில் அது போலி என தெரியவந்தாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
Pamela Anderson divorce | ஐந்தாவது கணவரை விவாகரத்து செய்கிறார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்!
மேலும் கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டிற்கும் அனுப்பாமல் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் பணத்தை கேட்டு வந்தவர்களை ஆனந்தராஜ் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்ந்த 99 நபர்கள் தனி பேருந்து மற்றும் பிற வாகனங்கள் மூலம் இன்று ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலைய காவலர்கள் இது தொடர்பாக ஆனந்தராஜிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போலி விசா வழங்கி 99 பேரிடம் 51 லட்சம் மோசடி செய்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில் பல ஆண்டு காலமாக இதுபோன்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாகவும், இவர்களிடம் மாட்டிக் கொண்ட ஏழை எளிய மக்கள் தங்கள் கடன் பெற்று கொடுத்த பணத்தை திரும்ப பெற வழி இல்லாமல் பலர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க இது போன்ற நபர்களை காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.