ஒருகோடி அப்பு.. ஒருகோடி..! பரிசுக்கு விண்ணப்பிக்க இதான் கடைசி தேதி..
2025 ஆம் ஆண்டுக்கான 'பசுமை சாம்பியன் விருதுகள்' சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்மாதிரி பங்களிப்பாளர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாளும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு அறிவித்த ‘பசுமை சாம்பியன் விருது’ திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற தகுதியான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) வரவேற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகச் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களைக் கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி செலவில் இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அரசின் தொலைநோக்குப் பார்வை
தமிழ்நாடு சட்டமன்றத்தில், 03.09.2021 அன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 2021-2022 நிதியாண்டு முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் தன்னார்வத்துடனும், முன்முயற்சியுடனும் பங்களிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1 கோடி செலவில் “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பங்களிப்பைச் செய்த 100 தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2025 -ஆம் ஆண்டிற்கான விருதுக்கான அழைப்பு
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) தற்போது 2025 ஆம் ஆண்டிற்கான 'பசுமை சாம்பியன் விருதுகளுக்கு' முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.
விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
* அமைப்புகள் / நிறுவனங்கள்
* கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள், கல்லூரிகள்)
* குடியிருப்பு நலச் சங்கங்கள்
* தனிநபர்கள்
* உள்ளாட்சி அமைப்புகள்
* தொழில்துறைகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்மாதிரியான பங்களிப்பினைச் செய்த மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருது வழங்கப்படும் முக்கியத் துறைகள்
"பசுமை சாம்பியன் விருது" பின்வரும் முக்கிய சுற்றுச்சூழல் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்.
* கல்வி மற்றும் விழிப்புணர்வு: சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
* ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு: புதுமையான பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள்.
* நிலைத்தன்மை: நிலையான வளர்ச்சிக்கு (Sustainable Development) பங்களிப்பு செய்தல்.
* மாசுக் கட்டுப்பாடு: திடக்கழிவு மேலாண்மை, நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், உமிழ்வு குறைப்பு.
* காலநிலை மாற்றம்: காலநிலை மாற்றத் தழுவல் (Adaptation) மற்றும் தணிப்பு (Mitigation) முயற்சிகள்.
* பாதுகாப்பு: சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான விருதுக் குழு (DLAC) மூலம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும். ஒவ்வொரு ஆண்டும், இக்குழுவின் மூலம் 100 அமைப்புகள், தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.tnpcb.gov.in உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறை
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மென் நகலுடன் (Soft Copy).
* அதே விண்ணப்பத்தின் இரண்டு அச்சுப் பிரதிகள் (Hard Copies) – கடித நகல்.
* இந்த ஆவணங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண். 613-ல் அமைந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அலுவலகத்தில் உள்ள பசுமைத் தோழரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி
2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கான முன்மொழிவுகளை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 20, 2026 ஆகும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூழலியல் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட தனிநபர்களும், அமைப்புகளும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் சிறப்பான பணிகளை ஆவணப்படுத்தி, இந்த மதிப்புமிக்க விருதைப் பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.






















