Mattu Pongal 2024: மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது..? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருக்கா..?
Mattu Pongal History in Tamil: விவசாயத்திற்கும், மனித வாழ்விற்கும் உறுதுணையாக ஆயிரம் ஆண்டுகளாக உள்ள மாடுகளை போற்றும் விதமாக இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Mattu Pongal History: தமிழர்களின் விழாவாக விளங்கும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தை முதல் நாளான நேற்று தைப்பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தை 2வது நாளான இன்று மாட்டுப்பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
மாட்டுப்பொங்கல்
உயிர்வாழ்வதற்கான ஆதாரமான உணவை படைக்கும் விவசாயத்தையும், அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனையும் வணங்கும் விதமாகவே அறுவடை நாளான தை முதல் நாளை மிகச்சிறப்பாக பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். அந்த விவசாயத்திற்கு விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ள மாடுகளுக்காக ( கால்நடைகள்) கொண்டாடப்படுவதே மாட்டுப்பொங்கல் ஆகும்.
ஏனென்றால், இன்று நவீன காலத்தில் விவசாயத்திற்கு டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டாலும் பல காலமாக விவசாயத்திற்கு( இன்றளவும் பல பகுதிகளில்) விவசாயத்திற்கு மனிதன் மாட்டை வைத்த ஏர்பூட்டிதான் விவசாயம் செய்தான். நிலம் செழிக்க மனிதனுக்கு நிகராக நிலத்தில் நின்று உழைத்த மாட்டிற்கு நன்றி தெரிவித்து, மாடுகளை கவுரவப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுவதுதான் மாட்டுப்பொங்கல் ஆகும்.
மரியாதை:
காளை மாடுகள் விவசாயத்திற்கும், ஜல்லிக்கட்டிற்கும் களமிறங்கினாலும் பசுமாடுகள் பால் தருவது உள்ளிட்டவை மூலம் மனிதனுக்கு வருமானத்தையும் அள்ளித்தந்து கொண்டிருக்கிறது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகள் வசிக்கும் தொழுவத்தை மக்கள் நன்கு சுத்தம் செய்கின்றனர். பின்பு, மாடுகளை இன்று சிறப்பாக குளிப்பாட்டி அவைகளை புத்துணர்ச்சி ஆக்கின்றனர். ஏற்கனவே மாடுகளின் கொம்புகளுக்கு புதிய வர்ணம் தீட்டி அலங்கரித்து வைத்திருப்பார்கள்.
அதன் கால்களிலும், கழுத்துகளிலும் சலங்கைகளை கட்டி அழகு பார்ப்பதுடன், மாடுகளுக்கு இன்றைய தினத்தில் புதிய மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறு ஆகியவை அணிவிப்பார்கள். மாடுகள் மட்டுமின்றி விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மற்ற விவசாய கருவிகளையும் இன்று மாட்டுத் தொழுவத்தில் வைத்து மாடுகளுக்கு மாலை அணிவித்து அவைகளை வணங்கி ஆயிரம், ஆயிரம் காலம் விவசாயத்திற்கும், வாழ்விற்கும் உறுதுணையாக இருந்த மாட்டிற்கு நன்றி தெரிவித்து அவைகளை வணங்கி மகிழ்வார்கள்.
ஜல்லிக்கட்டு:
மேலும், இன்றைய தினம் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் காளை மாடுகளின் பெருமையை பறைசாற்றுகின்றன. கிராமப்புறங்களில் பல குடும்பங்களில் வாழ்வாதாரமாக இன்று விளங்குவது மாடுகள் ஆகும். அவற்றின் பால் மூலமாக கிடைக்கும் வருமானத்தால் இன்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் செழிப்பாக வாழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாடுகள் விவசாயத்திற்கு மட்டுமின்றி பல நூற்றாண்டுகளாக போக்குவரத்து சாதனமாகவும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டு இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.