TVS 50-யில் சாகசம்..வைரலான வீடியோ - கரூரில் பாண்டியனை பிடித்த போலீஸ்
கரூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் கைது
சமூக வலைதளங்களில் ஒரு நபர் தனது TVS 50 இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லையில், கரூர் to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏழூர் to வீரராக்கியம் வரையிலான பகுதியில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் மற்றும் சாகசம் செய்யும் விதத்திலும் இருசக்கர வாகனத்தை ஒட்டி அதை தனது முகநூல் பக்கத்தில் Reel ஆக பதிவு செய்துள்ளார். இது, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் மேற்படி செய்தி ஒளிபரப்பப்பட்டு வேகமாக பரவி வந்தது.
இது தொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் உத்தரவின்படி, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் மேற்பார்வையில், பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கரூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் சமூக வலைதள பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டியது கரூர் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன். அவரை கைது செய்து அவர் ஓட்டிய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் மேற்படி தங்கபாண்டியன் மீது வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.