"தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பதா.. குண்டாஸ் சட்டத்தில் உள்ள போடுங்க" சென்னை ஐகோர்ட் அதிரடி!
சுதந்திர தினத்திற்காக தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியர்களுக்கு மிகவும் புனிதமான நாளாகும். உயிர்த்தியாகம் செய்து, நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த வீரர்களை நினைவுகூரும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் தொடங்கி, கல்வி நிலையங்கள், குடியிருப்பு வளாகங்கள் ஆகியவற்றில் தேசிய கொடி ஏற்றப்படும்.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு: இப்படிப்பட்ட சூழலில், தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சுதந்திர தினத்திற்காக தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் இன்று காலை தயாராகி கொண்டிருந்தார். அப்போது, சுதந்திர தினத்தை ஒட்டி குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார்.
அப்போது, தேசிய கொடி ஏற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
"கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது" "தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம்" என்றார்.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு, தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, இந்தியாவில் விடுதலை போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி ஆகியவை காரணமாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து இந்தியா விடுப்பட்டது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகால காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.