Senthil Balaji case: கைதுக்கான ஆவணங்களை வாங்க மறுத்தது ஏன்? செந்தில் பாலாஜி விவகாரத்தில் நீதிபதி கார்த்திகேயன் சரமாரி கேள்வி
கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது அதனை பெற செந்தில் பாலாஜி ஏன் மறுத்தார்? என்றும் நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு, ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என மூன்று அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என் ஆர் இளங்கோ ஆகியோர் ஆஜராகினர்.
அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறியுள்ளனர்: கபில் சிபல்
இன்றைய விசாரணையில், வாதம் முன்வைத்த கபில் சிபல், "ஆரம்பம் முதல் அமலாக்கத்துறை அதிகார வரம்பை மீறியுள்ளனர். சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளனர். நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது.
செந்தில் பாலாஜியை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது" என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதியின் இந்த நடைமுறை சரியானதல்ல.
சோதனை தொடங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார்: என்.ஆர். இளங்கோ
ஜூன் 13ம் தேதி சோதனை துவங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். வாக்குமூலமும் அளித்தார். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கதுறை குற்றம் சாட்டுகின்றனர்.
காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், காவலில் வைத்து விசாரிக்க வேண்டாம் என முடிவு செய்தால் காவலை திரும்ப பெற்றிருக்க வேண்டும். அதை விடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமர்வு நீதிபதிக்கு அமலாகத்துறை மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது" என்றார்.
கைது நடவடிக்கை சட்டத்தை மீறி இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்று கொள்ளுங்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது அதனை பெற செந்தில் பாலாஜி ஏன் மறுத்தார்? என்றும் நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார்.