’’மக்கள் உயிரை காப்பது அரசின் கடமை; அரசியல் கூட்டங்களுக்கு தடை’’- நீதிமன்றம் பொளேர்!
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் நலனே முக்கியம். மக்களின் உயிரைக் காக்க வேண்டியது அரசின் கடமை- மதுரை உயர் நீதிமன்றக் கிளை.

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் தமிழ்நாடு முழுவதும் 3 மாவட்டங்களுக்குச் சென்று தனது தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து வந்தார். இந்த பேரணிகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தன.
மூன்றாவது வாரமாக விஜய், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்குச் சென்றார். கடந்த சனிக்கிழமை (செப். 27) அன்று கரூரில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். பெண்கள், குழந்தைகள் உட்பட பல தரப்பினரும் உயிரிழந்த நிலையில், இது நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
9 வழக்குகள் தாக்கல்
இந்த நிலையில் தவெகவும் தமிழக அரசும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
குறிப்பாக, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரிய மனு, தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்கள், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய ஆதவ் அர்ஜூனா மனு உள்ளிட்ட 9 வழக்குகள் மீதான விசாரணையை இன்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தொடங்கி நடத்தி வருகிறது.
அரசியல் கட்சிக் கூட்டங்ளுக்கு அனுமதி இல்லை
இதில் கூட்டம் நடந்தது மாநில நெடுஞ்சாலையா? தேசிய நெடுஞ்சாலையா? எப்படி அங்கு அனுமதித்தீர்கள்? என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் நலனே முக்கியம். மக்களின் உயிரைக் காக்க வேண்டியது அரசின் கடமை. அதே நேரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இனி நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக் கூடாது. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரையில், அரசியல் கட்சிக் கூட்டங்ளுக்கு அனுமதி இல்லை. ஏற்கெனவே அனுமதி பெற்ற கட்சிகள் மட்டும், கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.























