பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவால் பரபரப்பு..
Prabhakaran Daughter Dwaraka: மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்காக தனித் தேசம் கேட்டுப் போராடியவர் பிரபாகரன்(Prabhakaran). இவரது தலைமையில் எல்.டி.டி.இ. எனப்படும் தமிழீழ தேசிய விடுதலைப் புலிகள் இயக்கம் அந்த நாட்டு சிங்கள அரசுக்கு எதிராக போராடியது. இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட சம்பவம் உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாவீரர் நாள்:
ஆண்டுதோறும் பிரபாகரன் பிறந்த நாளுக்கு அடுத்த நாளான நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மாவீரர் நாளாக அனுசரித்தனர்.
இந்த நிலையில், எல்.டி.டி.இ. தலைவரின் மகள் துவாரகா(Dwaraka) என்ற பெயரில் இளம்பெண் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இது ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அது உண்மையில் பிரபாகரன் மகள் துவாரகாவா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. பலரும் இது பிரபாகரன் மகள்தான் எனவும், துவாரகா இல்லை எனவும், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ எனவும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
பிரபாகரன் மகளா?
பிரபாகரன் மகள் துவாரகா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த இளம்பெண் பேசும் வீடியோவில், “தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான உன்னதமானவர்கள். எமது ஆழ்ந்த போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமது சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கான எமது தாயகத்திலும், புலம்பெயர்ந்த மக்களும், அரசியல் தலைவர்களும் எமது தேசிய விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்த போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மக்கள் என்றும், புலிகள் என்றும், ஈழத்தமிழர்கள் என்றும் வேறுபடுத்தி பார்ப்பது அர்த்தமற்றது. எனது அரசியல் போராட்டம் முன்னெடுத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கு இடையே வேறுபாடு கடந்து தமிழீழ தேச அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காவும், இன அழிப்புகளுக்கு ஆளாக்கப்பட்ட எனது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவு ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும் உண்டு.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தேசத்தின் அரசியல் உரிமை என்பது ஒரே கோட்டின் கீழ் பயணிக்க வேண்டும். அதேநேரத்தில் தாயகத்தின் வறுமை கோட்டின் கீழ் வாழும் எமது மக்களுக்காக கடந்த காலத்தில் போராடிய முன்னாள் போராளிகளின் மீது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியவர்களாக தேசத்தின் வளங்கொண்ட தரப்பினர் இருக்கின்றனர். இதற்கான பொறுப்பு புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு.”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோ ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், இந்த வீடியோ குறித்து இலங்கை அரசு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.