Election Commission: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு ; தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு!
வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவானது - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க தேர்தல் ஆணையம் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க தேர்தல் ஆணையம் கூட்டத்தில் முடிவு
இந்தியாவில் நீண்ட காலமாகவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்குமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை நாம் நல திட்டங்கள் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, சிம் கார்டுகள் வாங்குகள், பான் எண் பெறுவது , பாஸ்போர்ட் பெறுவது என பல செயல்களுக்கும் அடையாள ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம். ஆதாரை கட்டாயப்படுத்தி வாங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அனைத்து சேவைகளுக்கும் நாம் ஆதாரை வழங்கி கொண்டு தான் இருக்கிறோம்.
இதற்காகவே தனித்துவ அடையாள அமைப்பான UIDAI ஆதார் என்ற வசதியையும் ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த சூழலில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணைய தலைமையகத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி தலைமையில், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தான், வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவானது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், ஆதார் அடையாள அட்டை எண்ணும் விரைவில் இணைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியதாவது:
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 326வது பிரிவின் படி, இந்திய குடிமகனுக்கு ஓட்டளிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தகைய சூழலில், ஆதார் அடையாள அட்டை தான், அந்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, தேர்தல் கமிஷன் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆதார் அடையாள எண் ஆணையம், தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின் தக்க முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார். ஆனால் இந்த பணிகள் அதிகாரப்பூர்வமாக எப்போது தொடங்கும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன், பார்லிமென்டில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை எண்கள், பல மாநிலங்களில் ஒரே மாதிரியாக இருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே, நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் விரைவில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து தக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, 2015 பிப்ரவரியில், பல மாநிலங்களில் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்களை, ஆதார் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணி துவங்கியது. அப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் அடையாள அட்டையை, அரசுகளின் நலத்திட்டம் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

