மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 15 நாட்கள் அவகாசம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிப்.15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிப்.15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதார் எண்ணை இணைக்க இதுவே கடைசி அவகாசம் எனவும், இதனை நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். இன்று கடைசி நாள் என இருந்த நிலையில் மேலும் 15 நாட்கள் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 9% பேர் மட்டும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என கூறினார்.
தமிழ்நாட்டில் இதுவரை 2.34 கோடி மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 33 லட்சம் பேர் இணைக்காமல் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.
நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். 2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.