ஐபிஓவுக்கு வரும் எல்.ஐ.சி பங்குகள் - எதிர்ப்பு தெரிவிக்கும் எல்.ஐ.சி ஊழியர் சங்கம்
’’40 கோடி பாலிசிதாரர் களையும் 38- லட்சம் கோடி சொத்து மதிப்பு உடைய எல்ஐசி பொது நிறுவனத்தின் பங்குகளை விற்கக் கூடாது’’
கரூர் மாவட்டத்தில் யூனிட் 1 சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனத்தில் தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனம் கடந்த 1956 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி தேசியமயமாக்கப்பட்டது. எல்ஐசி நிறுவனத்திற்கு 16 நாடுகளில் கிளைகள் உள்ளது. ரூபாய் 35 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ள இந்த நிறுவனத்தில் 40 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட பணத்தில் நாட்டின் வளர்ச்சி திட்டங்களான ரயில்வே, சாலை விரிவாக்கம், வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்க முதலீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது. எல்ஐசி நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டு தற்போது 66 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த சூழலில், மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தனியார்மயமாக்குதல் என்ற நிலைப்பாட்டின் முதல் கட்டமாக கருதுகிறோம்.
1956 ஆம் ஆண்டு 5 கோடி முதலீட்டில் துவக்கப்பட்ட இந்த நிறுவனம், அரசிடமிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இது வரை இருபத்தி எட்டரை லட்சம் கோடியை இந்நிறுவனம் இந்திய அரசுக்கு வழங்கி இருக்கிறது. தேசத்திற்காக வருவாய் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த அவர், நாட்டின் சாதாரண மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் எல்ஐசி நிறுவனம் உறுதுணையாக இருந்து வருகிறது.
இவ்வாறு செயல்படக்கூடிய இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான காரணத்தை அரசு முழுமையாக வெளியிடவில்லை. எந்த காரணத்திற்காக இந்த நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டதோ அதற்கான காரணங்களில் இருந்து விலகிச் செல்ல நேரிடும். எனவே அரசின் இந்த போக்கை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளது. எனவே அரசு எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
எல்ஐசி தனியார் மயமாக்கும் அதற்காக மத்திய அரசு ஆயத்த பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து தற்போது எல்ஐசியின் நிறுவனத்தில் ஊழியர் சங்க நிர்வாகிகளும், அதைச்சார்ந்த பயன்பாட்டாளர்கள் எல்ஐசி தனியார் மயமாக்குவது கண்டித்து பல்வேறு போராட்டங்கள் இதுவரை நடத்தியுள்ளன.