IMD Alert: இந்த நிறத்திற்கு இதுதான் அர்த்தமா? வானிலை கொடுக்கும் அலர்ட்டுகளுக்கான விளக்கம் உங்களுக்காக..
வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படும் அலர்ட்டுகளுக்கு என்ன அர்த்தம் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டு மக்கள் அதிகம் கேட்கும் வார்த்தை மழை தொடர்பான அலர்ட் தான். ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் என்ற வார்த்தைகள் தான். இந்த அலர்ட்டுக்கு என்ன தான் அர்த்தம்? பருவநிலை மாற்றத்தின் போது வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகும். லேசான மழை முதல் அதி கனமழை வரை பதிவாகும். அப்படி பதிவாகும் மழைக்கு ஒவ்வொரு நிறத்தில் வானிலை மையம் தரப்பில் அலர்ட் விடுக்கப்படும்.
வண்ண குறியீடுக்கான அர்த்தம்:
மாநிலங்களில் மழைப்பொழிவின் தீவிரத்தை மக்களுக்கு தெரிவிக்க, இந்திய வானிலை ஆய்வு மையம் வண்ண - குறியிடப்பட்ட எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. 'ஆரஞ்சு' எச்சரிக்கை என்பது மிகவும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது அர்த்தம். மேலும் ஒரே நாளில் 115.6 -204.4 மிமீ மழை பொழிவு இருக்கும் என்பது அர்த்தம். 'ரெட்' அலர்ட் என்பது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் உடனடி நடவடிக்கை தேவை என்பது பொருள். மேலும் ரெட் அலர்ட்டின்போது, 204.5 மிமீக்கு மேல் மழை பெய்யும் என அர்த்தம். மஞ்சள் நிறம் என்பது லேசான மழை பெய்யும் என அர்த்தம். பச்சை நிறம் என்பது எந்த எச்சரிக்கையும் இல்லை என அர்த்தம்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
04.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
05.12.2023 மற்றும் 06.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.