கோடநாடு கொலை: சயன் சொன்ன வாக்குமூலம் இது தான்... அதிர்ச்சியில் அதிமுக!
சயானிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்த முழு விபரம் நீதிமன்றத்தில் அறிக்கையாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து தான் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
![கோடநாடு கொலை: சயன் சொன்ன வாக்குமூலம் இது தான்... அதிர்ச்சியில் அதிமுக! Kodanad estate murder case accused sayan revealed big names from aiadmk party கோடநாடு கொலை: சயன் சொன்ன வாக்குமூலம் இது தான்... அதிர்ச்சியில் அதிமுக!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/19/9fceddf6ec28217e2ee3d1909f327c99_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சயனிடம் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிமுகவின் முக்கியப்புள்ளிக்கு தொடர்பு இருப்பதாக வெளியான வாக்குமூலம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. சுமார் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பங்களாவில் ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தப்போது அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், கோடநாடு பங்களா களையிழந்துவிட்டது என ஊழியர்கள் கூறிவந்தனர். அப்போதைய சூழலில் தான் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் தான், எஸ்டேட்டில் அதே ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, பல கோடி ரூபாயான பொருட்களை திருடிச் சென்றது. அப்போது இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கேரளாவைச் சேர்ந்த சயன், வாளையர் மனோஜ், உதயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே இதில் சயன்மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நிபந்தனை ஜாமினில் உள்ளனர். மற்ற எட்டு பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியதையடுத்து சயனை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி காவல்துறை சம்மன் அனுப்பியது.
நீதிமன்றத்தில் உத்தரவினையேற்று விசாரணைக்கு ஆஜரான சயனிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், கோடநாடு பங்களாவில் உள்ள அறைகள், ஜன்னல்கள், செல்லும் வழி என அனைத்து தகவல்களையும் அறிந்த ஆளம் கட்சியைச்சேர்ந்த ஒருவர் தான் இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்று சயன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் தமிழகத்தில் பெரும் பரபரப்பினை ஏற்பத்தியுள்ளது. இந்நிலையில் தான் விசாரணை அதிகாரி வேல்முருகன், ஆகஸ்ட் 27 ஆம் தேதி தான் வழக்கு விசாரணைக்கு வருவதால் அப்போது தான் இந்த வழக்கு குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைய தேதி தான் சயானிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்த முழு விபரம் நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து தான் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்பு தான் கோடநாடு வழக்குக்குறித்து விசாரணையை துரிதப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் தான், அதிமுகவினரும் பொய் வழக்கினை திமுக தொடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தன்னை இந்த கொலை, கொள்ளை வழக்கில் இணைக்க சதி நடப்பதாக முன்னாள் தமிழக முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)