(Source: ECI/ABP News/ABP Majha)
Ungalil Oruvan Book Release: மிசா காலம்.. கேரளா நல்லுறவு.. சிஎம் விழாவில் பேசிய கேரள முதல்வர்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஸ்டாலின் குறித்து சில விஷயங்களை பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்' சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிட்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வரின் உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, துரை முருகன் பெற்றுக்கொண்டார்.
ராகுல் காந்தி, உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ்,கவிஞர் வைரமுத்து, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஸ்டாலின் குறித்து சில விஷயங்களை பேசினார்.
அதில், ''கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. படிப்படியாக வளர்ந்து இந்த உயரத்தை அடைந்துள்ளார் ஸ்டாலின். கேரளாவுடனான நல்லுறவு தொடர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து வருகிறார். மிசா கால கட்டத்தில் நானும், ஸ்டாலினும் பாதிக்கப்பட்டோம். பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்'' என்றார்.
விழாவில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, ”மிசா கைதியாக சிறை செல்லும் வரும் வரை நீளும் இந்த புத்தகம் ஒரு அரசியல் ஆவணம். அதே நேரத்தில் தன்னை செதுக்கிக் கொண்ட ஒரு சிப்பியின் கதை. அரசியல் மேடையாகட்டும், மனிதர்களாகட்டும் எல்லாவற்றில் இருந்தும் தான் கற்றுக்கொண்ட பாடங்களை நம்மோடு இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொள்கிறார். ஆயிரம் ஆயிரம் கண்கள் இருக்கும் இந்த அரங்கில், இந்த நிகழ்வை காணும் இரு கண்களை தேடுகிறார். அப்பா இங்கு இல்லை. ஆனால், இங்கு இருக்கும் அவரது உடன் பிறப்புகள் அனைவரது முகத்திலும், பெருமையிலும் பொங்கி வழிகிறது அப்பாவின் அன்பு. இந்த மேடை ட்ரைலர் மட்டும்தான். இனி படம் வரும். இந்த நிகழ்வு புத்தக வெளியீட்டு விழா மட்டுமில்லை, நாட்டை மதவாத சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் தளபதிகளின் அணிவகுப்பு” என தெரிவித்திருக்கிறார்.
விழாவில் பேசிய சத்யராஜ், பல நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில், ''எனது ஆங்கிலம் சற்று மோசம்தான். ஆனாலும் நான் கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அது ராகுல்காந்திக்காக. ராகுலை நான் வரவேற்கிறேன். அவர் நம்முடைய தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
ஒரு சிங்கத்தைப்போல அவர் குரல் கொடுத்தார். நாம் மனிதனாக இருக்க வேண்டுமென்றால் நமக்குள் மனிதநேயம் இருக்க வேண்டும். அதற்கு நாம் பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை படித்திருக்க வேண்டும். திராவிட முறைப்படி ராகுலை தம்பி என்று அழைக்கிறேன். சமூக நீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல்.
4 வருடத்துக்கு முன் கேரளா சென்றபோது சிறந்த முதலமைச்சர் பினராயி என்றேன். எங்களுக்கு அப்படி ஒரு முதலமைச்சர் கிடைக்கவில்லை என்றேன். அப்படியென்றால் பினராயியை தமிழ்நாட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றனர். நான் கூட்டிச் சென்றால் உங்களுக்கு நல்ல முதலமைச்சர் கிடைக்காமல் போவார்கள் என்றேன். இப்போது தேவையில்லை மு.க ஸ்டாலின் இருக்கிறார். பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இடையே யார் சிறந்த முதலமைச்சர் என்று போட்டி நடைபெறுகிறது’’ என்றார்.