Kerala Blast: கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிர சோதனை
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனை செய்யப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
![Kerala Blast: கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிர சோதனை Kerala Blast Kochi Convention Centre Blast Police Intensive Search in Nellai Tenkasi districts TNN Kerala Blast: கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தீவிர சோதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/30/55e0a9b2035e1a7c86baf57199b8408b1698648032643571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரள மாநிலம் எர்ணாகுளம் கிறிஸ்தவ வழிபாட்டு ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை முன்னிட்டு மாவட்ட எல்லைகளில் காவல்துறையால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனைச் சாவடியில் அதிகமாக வாகனங்கள் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் மிகுந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது. தற்போது நடைபெற்று வரும் வாகன சோதனையில் புளியரை மற்றும் செங்கோட்டை காவல் நிலையம் ஒன்றிணைந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் எஃப் ஆர் எஸ் (FRS- Face recognition software) எனப்படும் செயலி மூலம் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளை சோதனை செய்து வருகின்றனர். தென்காசி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் இந்த வாகன சோதனையானது நடைபெற்று வருகிறது.
அதே போல கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான தென்காசி, கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் சோதனை சாவடிகளிலும் வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள், வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. போலீசார் தங்கும் விடுதிகளில் உள்ள பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டு கடந்த வாரங்களில் தங்கி இருந்த நபர்கள் தொடர்பான விவரங்களையும் சேகரித்து அவர்களை தொடர்பு கொண்டு தகவல்களையும் பெற்று வருகின்றனர். விடுதிகளில் பூட்டி இருக்கும் அறைகளை விடுதி மேலாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது தவிர நெல்லை மாநகர் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய சோதனை சாவடிகள் மூலம் தீவிர வாகன சோதனை நடத்தவும் நெல்லை மாநகர் பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயங்கள் பள்ளிவாசல்கள், கோவில்களிலும் தீவிர கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனை செய்யப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தற்போது கூடுதலாக போலீசார் அங்கு நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது தவிர நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)