தொழில் முனைவர்களாக உருவாக வேண்டும் - மாணவர்களுக்கு கரூர் ஆட்சியர் வேண்டுகோள்
வெளி மாவட்டங்களில் பணிபுரிவோருக்கு 3 மாதங்களுக்கும், வெளி மாநிலங்களில் பணிபுரிவோருக்கு 6 மாதங்களுக்கும் இத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 44 வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் இளைஞர் திறன் திருவிழா முகாமில் இளைஞர்கள் திறன் பயிற்சியில் தங்களுக்குரிய திறன்களை மேம்படுத்தி தொழில் முனைவர்களாக உருவாக வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைர் த.பிரபுசங்ர் வேண்டுகோள் விடுத்தார். கரூர் மாவட்டம் தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் இளைஞர் திறன் திருவிழா- 2022 முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், “கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊரக பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது. DDU-GKY என்று சொல்லப்படுகின்ற தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ரூ.40,000 முதல் 70,000 வரை செலவிடப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயணச் செலவினமாக ஒரு நாளைக்கு ரூ.125 வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் சொந்த மாவட்டத்திலேயே பணி புரிவோருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வீதம் 2 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. வெளி மாவட்டங்களில் பணிபுரிவோருக்கு 3 மாதங்களுக்கும், வெளி மாநிலங்களில் பணிபுரிவோருக்கு 6 மாதங்களுக்கும் இத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 44 வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இளைஞர்கள் தங்களுக்குரிய திறன்களை மேம்படுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எங்கோ செய்யும் பொருட்கள் நாடு முழுவதும் விரிவடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களும் பல்வேறு மாநிலத்திற்கு, வெளிநாட்டிற்கு சென்று விற்பனை செய்து கொண்டு வருகின்றது. ஆகையால் பள்ளி, கல்லூரி படித்து முடித்தவர்களுக்கு ஒரு அடிப்படை பயிற்சியினை கற்றுக்கொள்வதற்கு அதற்காக வேலை வாய்ப்பு பெறுவது என்றால் சில தனிப்பட்ட திறன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் திறன் வளர்ப்பு என்பது அதற்கான உங்கள் அனைவருக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்ற திறன் வளர்ப்பு பயிற்சி எங்கேயும் வழங்க மாட்டார்கள். உங்களைத் தேடி வந்து பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் பல துறைகள் மூலம் செயல்படுத்தி வருகின்றன.
மேலும், அரசு வேலைக்கும் அனைவரும் முயற்சி செய்யலாம், அதில் வேலை வாய்ப்புக்கான அனைத்து போட்டித்தேர்வுகளை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து அதற்கு தகுந்தாற்போல் தொடர் பயிற்சியும், முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் ஏதாவது ஒரு திறனை வளர்த்துக் கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார உற்பத்தியில் ஒரு பங்காக தொழில் முனைவோராக இருக்க வேண்டும். எனவே இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வினை உயர்த்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். இளைஞர் திறன் திருவிழா- 2022 முகாமில் 565 மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கையில் கலந்துகொண்டனர். இதில் தொழிற்திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 172 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
இம்முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, தாந்தோணி அரசு கலை கல்லூரி முதல்வர் கௌசல்யா, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் ஆரூண், ஐ ஓ பி கிராம புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் திவ்யா, பயிற்சி ஒருங்கினைப்பாளர் தமிழ்வசந்தம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.