கரூரில் 'மக்களுடன் முதல்வர்' மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில் காலியாக கிடந்த இருக்கைகள்
கரூர் கோதூர் பகுதியில் தனியார்திருமண மண்டபத்தில் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்காக துறை வாரியாக அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.
கரூரில் நடந்த மக்களுடன் முதல்வர் மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில் இருக்கைகள் காலியாக இருந்தது. பொதுமக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம்கள் மூலம் வருவாய்த்துறை, மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்களிடம் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் அந்த சிறப்பு முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் இரண்டாவது நாளான கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாம் நடைபெறும் மண்டபத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக துறை வாரியாக அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால், பொதுமக்களிடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால், குறைந்த அளவிலான பொதுமக்களே முகாமில் கலந்து கொண்டனர். மனுக்கள் வழங்க போதிய கூட்டம் வராத காரணத்தால் மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், துறைவாரியாக போடப்பட்டிருந்த இருக்கைகள் காலியாக கிடந்தன. முகாம் நடைபெறும் இடத்திற்கு ஆய்வுக்கு வந்த மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் சுதா உள்ளிட்ட உயரதிகாரிகள் முகாமில் கலந்து கொள்ள போதிய மக்கள் கூட்டம் வராததால், தங்களுக்குள் பேசிக்கொண்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.