TVK Stampede Reason: கரூர் தவெக கூட்டத்தில் நெரிசல்; 33 பேர் பலி; நடந்தது என்ன.? யார் மேல் தவறு.?
கரூரில், விஜய் மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 33 பேர் பலியாகியுள்ளனர். 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உண்மையில் இந்த நிலை ஏற்பட்டது ஏன்.? தவறு யார் மீது.?

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், இன்று கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஏன் நடந்தது. தவறு எங்கு நடந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரிய தவெக
கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக, லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பேருந்து நிலைய மகோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். இதையடுத்து, லைட் ஹவுஸ் கார்னரை ஒதுக்குவதாக முதலில் தெரிவித்த காவல்துறை, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க முடியாது என மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
பின்னர் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கரூர் சென்று மாவட்ட எஸ்பி-யிடம் பேசினார். ஆனாலு அதற்கெல்லாம் செவிசாய்க்காத காவல்துறை, முந்தைய நாள் இபிஎஸ் பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரத்தை தவெகவிற்கு ஒதுக்கியது. இது காவல்துறை தரப்பில் நடந்த தவறு என கூறலாமா.?
ஏனென்றால், தவெகவினர் மனு அளிக்கும் போதே, லைட் ஹவுஸ் கார்னர் பகுதியின் பரப்பளவை அளந்து, அங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடலாம், ஆனால் எதிர்பார்க்கப்படும் கூட்டம் 10 ஆயிரத்திற்கும் மேல் தான் என கூறியிருந்தது. ஆனால், காவல்துறை அந்த இடத்தை ஒதுக்காமல், சிறிய இடமான வேலுசாமிபுரத்தை ஒதுக்கியது.
அந்த இடம், அங்கு திரண்ட தொண்டர்களை பார்த்தபோது, மிகச்சிறிய இடம் போல் தான் தெரிந்தது. ஏனென்றால், கட்டுக்கடங்காத கூட்டத்தையும், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நின்றதையும் அங்கு பார்க்க முடிந்தது. இதனாலேயே அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இத்தகைய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தவெக தரப்பில் தவறு நடந்ததா.?
இன்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில தவிர்க்கமுடியாத காரணங்களால் நாமக்கல்லிற்கு அவர் சற்று தாமதமாகவே சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும் தாமதமாகின.
கரூர் பகுதிக்கு அவர் மதியமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலையில் தான் அவர் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு வந்தார். ஆனால், அவர் வருகைக்காக தொண்டர்கள் காலை சுமார் 11 மணியிலிருந்தே வேலுசாமிபுரத்தில் குவியத் தொடங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதிலும், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.
விஜய் மாலையிலேயே அங்கு வந்ததால், அதுவரை குடிநீர், உணவு இன்றி தொண்டர்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, கூட்டம் அதிகரித்த நிலையில் ஏராளமானோர் மயக்கமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்போது, இந்த சம்பவத்திற்கு தவெக-வை குறை கூறுவதா.?
தொண்டர்கள்/மக்கள் செய்த தவறு என்ன.?
விஜய் தனது பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பே, தவெக சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் நடந்ததோ வேறு. இன்று கரூரில், ஏராளமான பெண்கள், அதிலும் வயதான பெண்களும் திரண்டிருந்தனர். அதேபோல், ஏராளமானோர் தங்கள் குழந்தைகளையும் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தனர். விஜய் பரப்புரை என்றாலே கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது என்பது, அவரது முந்தைய கூட்டத்திலேயே தெரிந்துவிட்ட நிலையில், இப்படி பெண்கள், குழந்தைகள் கூட்டத்திற்கு வந்ததற்கு யார் மீது தவறு சொல்வது.? மக்கள் தான் அதை யோசித்திருக்க வேண்டும். ஆனால், கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி கூட்டத்திற்கு வந்து பலியாகியுள்ளனர்.
இதையெல்லாம் வைத்து பார்த்தால், ஒரு சாரார் மீது மட்டும் குற்றம் சாட்டுவது என்பது சாத்தியமில்லை. ஒரு விஷயம் நடக்கிறதென்றால், பல தரப்பிலும் அதற்கான சிந்தனை இருக்க வேண்டும். தற்போது நடந்துள்ளது, மிகப்பெரிய துயர சம்பவம். இதில், ஒரு தரப்பை மட்டும் குறை சொல்லாமல், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்பதையே அனைவரும் யோசிக்க வேண்டும்.





















