TVK Vijay: ஒரு வாரத்தை நெருங்கும் கரூர் துயரம்; ஒருமுறையாவது செல்வாரா தவெக தலைவர் விஜய்? தாமதத்துக்கு இதுதான் காரணமா?
TVK Vijay: இந்த துயரச் சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகப்போகிறது. மாண்டவர்களை மண்ணில் புதைத்து புதைத்த இடத்தில் மீது புல்லே முளைத்திருக்கும்.

தவெக தலைவர் விஜயின் கரூர் மக்கள் சந்திப்புப் பேரணியில் 41 பேர் பலியான நிலையில், கொடுந்துயரம் நடந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகப்போகிறது. எனினும் விஜய் இதுவரை சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் தமிழ்நாடு முழுவதும் 3 வாரங்களாக 6 மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று தனது தொண்டர்களையும் பொது மக்களையும் சந்தித்து வந்தார். இந்த பேரணிகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தன.
41 பேர் பரிதாப பலி
மூன்றாவது வாரமாக விஜய், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்குச் சென்றார். கடந்த சனிக்கிழமை (செப். 27) அன்று கரூரில் இரவு 8 மணியளவில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். பெண்கள், குழந்தைகள் உட்பட பல தரப்பினரும் உயிரிழந்த நிலையில், இது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பவ தினத்தன்றே கரூர் மாவட்டத்துக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தினார். அடுத்த நாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்றனர். அடுத்தடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்களும் கரூர், வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்றனர்.
புதைத்த இடத்தில் மீது புல்லே முளைத்திருக்கும்
இந்த துயரச் சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகப்போகிறது. மாண்டவர்களை மண்ணில் புதைத்து புதைத்த இடத்தில் மீது புல்லே முளைத்திருக்கும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடே திரும்பி இருக்கலாம்.
எனினும் தவெக இரண்டாம் கட்டத் தலைவர்களோ, நிர்வாகிகளோ பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று காணவில்லை. ’’தங்கள் தலைவர்’’ விஜயை நேரில் காணச் சென்று வீடு, நாடு மட்டுமல்லாமல் உயிரையே இழந்தவர்களின் குடும்பங்களையோ, பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களையோ விஜய் இன்னும் சந்திக்கவே இல்லை.
மக்களைச் சந்திக்காதது ஏன்?
கடந்த சனிக்கிழமை அன்று கூட்டத்துக்கு வந்த மக்கள் உயிரிழந்தது தெரிந்தும் அன்றே விரைவாகச் சென்னை திரும்பினார் விஜய். தான் செப்.30 அன்று வெளியிட்ட வீடியோவில் பதற்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதாலும் காவல்துறை அனுமதி அளிக்காததாலும் உணர்வுபூர்வமாக இருந்ததாலும் மக்களைச் சென்று சந்திக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். கூடிய விரைவில் மக்களைச் சென்று சந்திப்பேன் என்றும் கூறி இருந்தார். எனினும் இதுவரை அவர் கரூர் செல்லவில்லை.
இதுகுறித்து தவெக தரப்பில் கேட்டபோது, காவல்துறை அனுமதி அளிக்காததாலேயே விஜய் கரூர் செல்வது தாமதமாகி வருவதாகத் தெரிவித்தனர்.
எது எப்படி இருந்தாலும் விஜய் உடனடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும், அதுவே தலைமைக்கும் நல்ல தலைவனுக்கும் அழகு என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















