Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக பலியான நிகழ்வில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
என்னென்ன வழக்குகள்?
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக பலியான நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்றம் முன்மொழிந்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதேபோல தவெக தலைவர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்குத் தடை விதிக்கவும் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
அதேபோல பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள், இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சரியா ஆகிய இருவரும் விசாரிக்கின்றனர். இதற்கான வாதங்கள் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது.
2 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய மூவர் குழு
இதில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
’’இந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு கேடர் அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. நியாயமான விசாரணை தேவை என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்’’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனி நீதிபதி மீறியுள்ளார்
தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தின் வரம்பை, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மீறியுள்ளார். மதுரை வரம்புக்குள் வரும் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
பிரச்சார நெறிமுறைகளை வகைப்படுத்தக் கோரிய வழக்கை கிரிமினல் ரிட் மனுவாக விசாரித்தது எப்படி என்று உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விசாரணையில், ’’கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை, மதுரை உயர் நீதிமன்றத்துக்கு பதிலாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவுக்கான உத்தரவு அமைக்கப்பட்டது எப்படி? கிரிமினல் வழக்காகக் கருதப்பட்டது ஏன்?’’ என்று உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.
தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் வாதிட்ட நிலையில், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.






















