TVK Vijay: அரசியல் அறிவில்லாதவர்களை உடன் வைத்துள்ளாரா விஜய்? தவெக தப்புமா?
கரூர் துயர சம்பவத்தை விஜய் கையாளும் விதம் பலரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ள நிலையில், போதுமான அரசியல் அறிவுள்ளவர்களை விஜய் உடன் வைத்திருக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. ஆனால், தற்போதே தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகரும் தவெக தலைவருமான விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் ரசிகர்கள் பலத்தை நம்பி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார்.
கரூர் துயர சம்பவம்:
விஜய் கட்சி தொடங்கி தனது கொள்கைளை அறிவித்தது முதலே அவர் மீதும், அவரது கட்சி மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனாலும், அவருக்கு பக்கபலமாக அவரது தொண்டர்கள் தொடர்ந்து நின்று வருகின்றனர். ஆனால், கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்யின் அரசியல் அறிவு குறித்து அவரது தொண்டர்கள் மத்தியிலே கேள்வியை எழுப்பியுள்ளது.
ஏனென்றால், விஜய்யைப் பார்க்க வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலாலே 41 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்காக 3 நாட்கள் கழித்தே விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை தவெக நிர்வாகிகள் யாரும் நேரில் சென்று சந்திக்கவில்லை.
அதிருப்தியில் தவெக தொண்டர்கள்:
எதிர்பாராத விதமாக நடந்த இந்த அசாதாரண சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற பக்குவம் இல்லாதது கடந்த 3 நாட்களில் நன்றாகவே தெரிந்ததாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியாக கருதப்படும் ஆதவ் அர்ஜுனா பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ட்வீட் பதிவிட்டதும், பின்னர் அதை நீக்கியதும் தவெக தொண்டர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உண்டாக்கியது.
மேலும், விஜய் வீடியோ வெளியிட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்காக அவரது கட்சியினர் யாரும் களத்திற்கு செல்லாததும், அவரது வீடியோவிலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆணித்தரமாக ஏதும் அவரது அரசியல் எதிரிகள் குறித்து வாதங்களை முன்வைக்காததும் விஜய் தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கைதாகியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலாக தவெக செயல்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டவர்களை வெளியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் தொய்வு நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
போதுமான அரசியல் அறிவு இல்லையா?
இதுமட்டுமின்றி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சிடி நிர்மல்குமார் போன்றோர் தலைமறைவாக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருவதும் கட்சியில் விஜய் போதுமான அரசியல் அறிவற்றவர்களை உடன் வைத்துள்ளார் என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கைது நடவடிக்கைக்கு பயப்படும் அரசியல்வாதிகள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்ற வாதத்தை மிகப்பெரிய அளவில் பலரும் முன்வைத்து வருகின்றனர்.
மேலும், மக்கள் மத்தியில் புரட்சிகரமான முடிவுகளையும், அதிரடியான செயல்பாடுகளையும் கொண்டவரே தலைவராக நீடிக்க முடியும். ஆனால், விஜய் துணிச்சலான முடிவுகளை எடுக்க மிகவும் தயங்குவதை இந்த கரூர் சம்பவம் காட்டுகிறது. மேலும், இந்த பரபரப்பான சம்பவத்திற்கு இடையே ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ளார்.
கூட்டணி வலையில் விஜய்?
இந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிமுக - பாஜக விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருப்பது விஜய் கூட்டணி வலையில் விழுவதற்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சரியான வழிகாட்டி இல்லாத நிர்வாகிகளை விஜய் வைத்திருப்பதே கரூர் துயரசம்பவத்தை தவெக எதிர்கொள்ள முடியாமல் திணறுவதற்கான சான்றாகும்.





















