கரூர் கூட்ட நெரிசல்: விஜய்-க்கு சிபிஐ சம்மன்! அதிர்ச்சியில் தமிழகம்! விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜனவர் 12ஆம் தேதி ஆஜராக விஜய்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் நேரில் ஆஜராக சம்மன்
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். விஜய் தாமதமாக சென்றதால் நெரிசல் ஏற்பட்டத்துடன் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில், பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கரூர் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், தற்போது விஜயை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஒரே நேரத்தில் டெல்லி மற்றும் கரூரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் பின்னணி என்ன ?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவித் தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் தற்போது கரூரில் முகாமிட்டு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்திற்கு காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடு காரணமா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிர்வாகிகளின் திட்டமிடல் தோல்வி காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடம் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றக் குழுவின் நேரடி கண்காணிப்பு
இந்தச் சிபிஐ விசாரணையை முறைப்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண் மற்றும் சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் விபத்து நடந்த இடங்களை நேரில் பார்வையிட்டதுடன், கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்ட இடங்களின் வரைபடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தனர். இதுவரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளரிடம் இரண்டு முறை விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிர்வாகிகளுக்கு டெல்லி சிபிஐ அலுவலகம் அழைப்பு
தற்போது இந்த வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.





















