(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் : ட்ரங்க் அண்ட் ட்ரைவா? பத்தாயிரம் அபதாரம்.. போலீசார் அதிரடி
கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு, தலா பத்தாயிரம் வீதம் அபராதம் விதித்து தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள் "விபத்தில்லா கரூர்" உருவாக்க பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு அவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் 12 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக சாலைகளில் வழக்கம் போல் வாகனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்திற்குள் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களான திருக்காம்புலியூர் ரவுண்டானா, தடா கோவில், மருதூர் பிரிவு ,அய்யர்மலை, தோகைமலை உள்ளிட்ட 12 இடங்களில் மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஐந்து துணை கண்காணிப்பாளர்கள். தலைமையில், எட்டு ஆய்வாளர்கள் 11 துணை ஆய்வாளர்கள் மற்றும் 82 காவலர்கள் இந்த தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, அதிகவேக பயணம், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் முக கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாத உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியும் தீவிரமாக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் விபத்தில்லா கரூர் என்ற நிலையை உருவாக்க காவல் கண்காணிப்பாளர் உடன் இணைந்து தற்போது கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இன்று வரை இதுவரை 26 வாகனங்கள் மீது ரூபாய் பத்தாயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிக்கப்பட்ட பின் வாகனங்கள் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராத தொகையான ரூபாய் 10 ஆயிரத்தை நீதிமன்றம் மூலம் செலுத்தி அதற்கான ரசீதை காமித்து வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இத்தகைய அதிரடி நடவடிக்கையால் மது அருந்துவிட்டு வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.விபத்தை குறைக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகத்துடன் ,காவல் துறை இணைந்து புத்துயிர் பெற்றுள்ள முயற்சியினை பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
எனினும், காவல்துறை சோதனைக்கு பயந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் பல்வேறு சந்து, பொந்துகளில் தங்களுக்கு தெரிந்த வழிகளில் தப்பித்து செல்கின்றனர் என்பது கூடுதல் தகவல். தமிழகத்தில் விபத்து இல்லாத மாவட்டமாக கரூரை உருவாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.