கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் ஏராளமான வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன.
கரூர் மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சிதலமடைந்த கட்டிடங்கள் மற்றும் கடைகள் ஆணையர் உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் ஏராளமான வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்துள்ளன. குறிப்பாக மாநகராட்சி கட்டிடத்திற்கு பின்புறம் செல்லக்கூடிய சாலையில் ஒரு சில கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில், பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால், குறிப்பிட்ட நான்கு கடைகளை காலி செய்யச் சொல்லி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இறுதி அவகாசமாக ஏழு நாட்களுக்குள் கடையை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.
ஆனால், மாநகராட்சியின் உத்தரவை ஏற்காமல் கடையை காலி செய்யாமல் இருந்த வாடகைதாரர்களின் இரண்டு கடைகள் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவகாசம் முடிந்த இரண்டு கடைகள் காலி செய்யப்படாத நிலையில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளை இடித்து அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அந்த இரண்டு கடைகளும் பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டன. மேலும், அதே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பில் இருந்த மற்றொரு கடையும் இடித்து அகற்றப்பட்டது.
கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணியின் போது மின்வாரிய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு செல்லக்கூடிய இணைப்புகளை துண்டித்து , அவ்வழியாக செல்லக்கூடிய மின் இணைப்புளின் மின்சார விநியோகத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். இதன் காரணமாக ஜவகர் பஜார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.