100 நாள் வேலை வழங்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிப்பு - கரூர் குறைதீர் கூட்டத்தில் மனு
100 நாள் வேலை பயனாளி மாரியம்மாள் கூறுகையில், 100 நாள் வேலை இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். போன வருடம் கூட ஏதோ கொஞ்சம் வேலை கொடுத்தார்கள் என்றார்.
100 நாள் வேலை வழங்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் வட்டம் குள்ளம்பட்டி பகுதியைச் சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, கிருஷ்ணராயபுரம் குள்ளம்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் குள்ளம்பட்டி, இருப்புக்குழி ஊர் மக்களுக்கு வேலை செய்து வந்ததாகவும், 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று வாரங்கள் மட்டுமே வேலை கொடுத்துள்ளதாகவும், அதன் பிறகு கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் வேலை வழங்கவில்லை எனவும், இதனால் எங்களில் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து 100 நாள் வேலை பயனாளி மாரியம்மாள் கூறுகையில், 100 நாள் வேலை இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். போன வருடம் கூட ஏதோ கொஞ்சம் வேலை கொடுத்தார்கள். ஆனால், இந்த வருடம் வேலை கொடுக்கவில்லை. எங்கள் ஊரில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு சாலை சரியாக இல்லை. அதனை சுத்தம் செய்வதற்கு எங்களுக்கு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
கரூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதிதிராவிடர் துறை சார்பில் பட்டியலின சமூக மக்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட ஒதுக்கப்பட்ட நிதியில் தங்கள் ஊரில் தண்ணீர் தொட்டி கட்டக்கூடாது என்று பிற்படுத்தப்பட்ட கிராம மக்கள் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு.
அருகம்பாளையத்தில் பட்டியல் இன மக்களுக்கு புதிய தண்ணீர் தொட்டி கட்டுவதை தடை செய்ய புகார் மனு.
கரூர் அடுத்த காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட, அருகம்பாளையம் கிராம மக்கள் தர்மகர்த்தா சுரேஷ் என்பவர் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் தங்கள் ஊரில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த (கவுண்டர்) இன மக்கள் 150 குடும்பம் வாழ்ந்து வருவதாகவும், ஊருக்கு மத்தியில் அமைந்துள்ள தங்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. அதை சுற்றி பொதுமக்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து கொண்டு வரும் சூழ்நிலையில், பட்டியல் இன மக்களுக்கு ஆதிராவிடர் நலத்துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் புதிய தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பொது மக்களிடம் தெரிவிக்காமல் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர்.
பட்டியல் இன சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மற்றொரு சமூக மக்கள் வாழும் பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டுவதால் பிற்காலத்தில் மக்களுக்கிடையே மனக்கசப்பும், பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்து அந்த இடத்தில் தண்ணீர் தொட்டி கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நவீன தீண்டாமை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட தண்ணீர் தொட்டி கட்டுமானத்திற்கு தடை கூறிய புகார் மனு பரபரப்பை கிளப்பி உள்ளது.
மேலும், நவீன தீண்டாமை பேச்சு அளவிலும் செயல் அளவிலும் இருந்து வந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு வரை சென்றுள்ளதால் பட்டியலின சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.