தரம் உயர்த்தப்பட்ட குளித்தலை அரசு மருத்துவமனை - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மக்கள் நன்றி
கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்னர், குளித்தலை அரசு மருத்துவமனை அரசு தலைமை மருத்துவமனையாகும் என்ற எதிர்பார்ப்பு குளித்தலையில் நிலவியது.
கரூர் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகவும், குளித்தலை அரசு மருத்துவமனை அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனையாகவும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. கரூர் நகரின் மையத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்க அன்றைய அதிமுக அரசால் உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட வாங்கலில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்ட அன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜி நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவரை தொடர்ந்து, அமைச்சராக வந்த விஜயபாஸ்கர் வாங்கலுக்கு பதில் கரூர் காந்தி கிராமத்திலேயே புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான பணியை தொடங்கி மருத்துவமனை கட்டப்பட்டு இப்போது செயல்பாட்டிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி ஏற்பட்டது. அதில் கரூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி அமைச்சரானார். கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்னர், குளித்தலை அரசு மருத்துவமனை அரசு தலைமை மருத்துவமனையாகும் என்ற எதிர்பார்ப்பு குளித்தலையில் நிலவியது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணை எண் 18 தமிழகத்தில் 13 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாலும், புதிதாக ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாலும், இந்த 19 மாவட்டங்களிலும் தலா ஒரு அரசு மருத்துவமனை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இல்லாத 24 மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கிட புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், ஆகிய 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. தென்காசி, குளித்தலை, திருச்செங்கோடு, அம்பாசமுத்திரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய ஐந்து அரசு மருத்துவமனையை கட்டமைப்புகள் கோடி மதிப்பீட்டில் மாவட்ட மருத்துவ மனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் கேட்டபோது;
கரூர் அரசு மருத்துவமனை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக உயர்த்தப்படும் என்று தேர்தல் நேரத்தில் தெரிவித்திருந்தோம். இப்போது கரூர் அரசு தலைமை மருத்துவமனையாக, அதேபோல் குளித்தலை அரசு மருத்துவமனையில், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனையாக குளித்தலை மருத்துவமனை உயர்த்தப்படுகிறது. இதற்காக கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.10 கோடியையும், குளித்தலை மருத்துவமனைக்கு ரூபாய் 50 கோடியையும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும் மருத்துவர் துறை அமைச்சருக்கும் கரூர் சட்டசபை தொகுதி கரூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.