கரூர்: மேட்டுப்பட்டி பிரிவு அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு
மேட்டுப்பட்டி பிரிவு அருகே சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு. மற்றொரு பெண்ணுக்கும் கார் டிரைவருக்கும் பலத்த காயம். அரவக்குறிச்சி காவல்துறை விசாரணை.
கோவை மாவட்டம் கணபதி அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் டிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமாலை ராஜ் வயது 62. இவருக்கு சொந்தமான இண்டிகா இஜெட் வாகனத்தில் நேற்று திண்டுக்கல் கரூர் சாலையில் மதியம் ஒரு மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, அரவக்குறிச்சி தாலுக்கா வேலம்பாடி அருகே உள்ள புதுவாடி பகுதியைச் சேர்ந்த முரளி வயது 35 அவரது மனைவி ஆகிய இருவரும் டூவீலரில் எதிர் திசையில் தவறான பாதையில் வந்துள்ளனர். இதனால் ஜெபமாலை ஓட்டிச் சென்ற கார் அவர்கள் மீது மோதி உள்ளது.
இதனைத் தொடர்ந்து முரளியின் டூ வீலர் வாகனத்திற்கு பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த அதே புதுவாடி பகுதியைச் சேர்ந்த ராஜு வயது 50, அவரது மனைவி தனக்கொடி வயது 45 ஆகியோரது வாகனத்தின் மீது மோதி விட்டு சாலையின் இடதுபுற பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து உண்டானது.
இந்த விபத்தில் இரண்டாவது டூவீலரில் வந்த ராஜி மற்றும் அவரது மனைவி தனக்கொடி பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். முதல் டூவீலரில் வந்த முரளியின் மனைவிக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதே போல காரை ஓட்டி வந்த ஜெபமாலை ராஜுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த ராஜி மற்றும் தனக்கொடி ஆகியோரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயமடைந்த காரை ஓட்டி வந்த ஜெபமாலை ராஜ் மற்றும் முரளியின் மனைவி ஆகியோர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.