கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டையில் காலில் கத்தி கட்டக்கூடாது, சூதாட்டம் கூடாது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை நடப்பது வழக்கம். அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வந்தது.
கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டையில் கோழி காலில் கத்தி கட்டக்கூடாது, சூதாட்டம் கூடாது, சேவல் சண்டை நடத்தும் இடங்களை சுற்றி 10 கி.மீ சுற்றளவிற்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொது நல வழக்கு தொடர்ந்த பிரேம் குமார் பேட்டியளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை நடப்பது வழக்கம். குறிப்பாக அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2017ம் ஆண்டு சேவல் சண்டையின் போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி பார்வையாளர் வயிற்றில் குத்தியதில் சேவல் சண்டை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று நீதிமன்ற வழிகாட்டுதல் படி சேவல் சண்டை நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சேவல் சண்டை நடக்கும் போது யாரும் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது, சேவல் காலில் கத்தி கட்டக் கூடாது எனக் கூறி கரூரை சேர்ந்த பிரேம் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அப்போது, அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு முழுக்க சேவல் சண்டை நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், பொதுநல வழக்கு தொடர்ந்த பிரேம் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”சேவல் சண்டை நடத்தக் கூடாது என்பது எங்களது எண்ணம் இல்லை. சேவல் சண்டை நடத்தும் போது சேவலின் காலில் கத்தியை கட்டக் கூடாது, சேவல் சண்டை நடைபெறும் இடத்தை சுற்றி 10 கி.மீ தூரத்திற்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், சேவல்களின் மீது பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார். சேவல் சண்டை நடத்தப்படும் போது பார்வையாளர்கள், ஜாக்கிகள், பொதுமக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடத்த வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.