கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக பெட்ரோல் குண்டு வீச்சு - கரூரில் பரபரப்பு
கௌதம் 3 லட்ச ரூபாய்க்கு மேல் தரவேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கௌதமிடம் கொடுத்த பணத்தை நிதி நிறுவன உரிமையாளர் தினேஷ்குமார் திருப்பி கேட்டுள்ளார்.
கரூரில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருகம்பாளையம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கரூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (28), ஆனந்த் (27), மதன் (30) ஆகிய மூன்று பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். வரவு செலவு கணக்கில் குளறுபடி ஏற்பட்டதால் மூன்று பேரையும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வேலையிலிருந்து தினேஷ்குமார் நிறுத்தி உள்ளார்.
மேலும், கௌதம் 3 லட்ச ரூபாய்க்கு மேல் தரவேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கௌதமிடம் கொடுத்த பணத்தை நிதி நிறுவன உரிமையாளர் தினேஷ்குமார் திருப்பி கேட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த கௌதம், ஆனந்த் மற்றும் மதன் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று நள்ளிரவு 11.00 மணியளவில் பாலாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள தினேஷ் குமார் வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இந்த காட்சி தினேஷ் குமார் வீட்டின் முன்பு உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி ஆதாரத்தை வைத்துக்கொண்டு பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேரையும் வெங்கமேடு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்