கரூர்: 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர் காவிரி ஆறு
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . காவிரி நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு மாயனூர் தயாராகி வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டு, மாயனூர் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூரில் நூற்றாண்டு சாதனை நோக்கி காவிரி மாயனூர்
மாயனூர் காவிரி ஆறு 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இயற்கையில் இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் காவிரி. தலை காவிரி உற்பத்தியாகி ஆங்காங்கே பாசன வாய்க்காலாக பிரிந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை விளைவிக்க செய்கிறது. விவசாயத்திற்கு மூல ஆதாரமாக காவிரி விளங்குகிறது. காவிரி இல்லை என்றால் விவசாயமே கேள்விக்குறியாகிவிடும். முன்பெல்லாம் பருவம் தவறாமல் ஆண்டுதோறும் மும்மாரி மழை பெய்து காவிரியில் தண்ணீர் வற்றாமல் சென்று கொண்டே இருக்கும். காவிரி நீருக்காக அண்டை மாநிலத்தை தமிழகம் எதிர்பார்க்கவில்லை.
குறுவை, சம்பா பருவத்திற்கு குறித்த காலத்தில் நமக்கு தண்ணீர் கிடைத்தது. அதை வைத்து முப்போகம் விவசாயம் பார்க்கப்பட்டது. தானிய உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றது. இயற்கையின் மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லாமல் தண்ணீருக்காக அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதிகப்படியான தண்ணீர் வரும்போது வெள்ள அபாயமாக அறிவித்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு பெருக்கெடுத்து செல்லும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்றதை அனைவரும் பார்த்திருப்போம். கடந்த ஆண்டுகளில் கூட காவிரியில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றதை பார்த்திருப்போம். ஆனால் 1924 ஆம் ஆண்டு சாதனையை காவிரியால் இன்னும் முறியடிக்க முடியவில்லை. இந்த சாதனை நடந்து 99 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு 100 ஆண்டு நிறைவடைய உள்ளது. காவிரி நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு மாயனூர் தயாராகி வருகிறது.
உச்சகட்ட சாதனை
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டு, எத்தனை கன அடி தண்ணீர் சென்றது என்ற விவரம் மாயனூர் பழைய கட்டளை கதவணையில் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1924 ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதி மாயனூர் பழைய கட்டளை படுக்கை அணை வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 லட்சத்து 63 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றுள்ளது. 1961ம் ஆண்டு அதே ஜூலை மாதம் 7ம் தேதி 3 லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 1977, 1979, 1980, 2022ம் ஆண்டு வரை காவிரியில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர்ச் சென்றுள்ளது. 1924 ஆம் ஆண்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுதான் உச்சகட்ட சாதனையாக இருந்துள்ளது. அதன் பிறகு 4 லட்சத்திற்கு மேல் தண்ணீர் காவிரியில் சென்றதில்லை என்கின்றனர் நீர் வளத்துறையினர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட, 1924ம் ஆண்டு சாதனையை எட்டிப் பிடிக்க முடியுமா? என்பது இயற்கையின் கையில்தான் உள்ளது. இந்த ஆண்டு வரை 1924 ஆம் ஆண்டுதான் உச்சகட்ட சாதனை. அடுத்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியோடு 100 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர், காவிரி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. கரூர் மாவட்டம், கதவணைக்கு, முன்தினம் வினாடிக்கு, 11 ஆயிரத்து, 886 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 11 ஆயிரத்து 829 கன அடியாக குறைந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 11, ஆயிரத்து, 329 கன அடியும், தென்கரை வாக்காலில், 500 கன அடியில் தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 551 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 63. 16 அடி ஆக இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 218 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.