கரூர் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு -7 பேர் கைது
’’மதுபோதையில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்’’
கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்களில் கார்த்திகை, மார்கழி, தை, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் மூன்று நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். முதல் நாள் இரவு கோவில் அருகே உள்ள கிணற்றில் கரகம் பாலித்து, மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் உடன் ஆலயத்தின் பூசாரி கரகத்தை தலையில் சுமந்தவாறு கோயில் வந்து அடைவார்கள். இரவு சிறப்பு பூஜை நடைபெற்று விழா இனிதே துவங்கும். மறுநாள் காலை கோயில் கிணற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல், கரும்பு தொட்டி உள்ளிட்ட தங்களுடைய நேர்த்திக் கடனை செய்வார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கரூர் மாவட்டத்தில் 9.05 லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்
இன்னிலையில் கரூர் மாவட்டம், வெங்கமேடு என்.எஸ்.கே. நகரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அதே பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் (58), பிரபு (28) ஆகியோர் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த நரேஷ் (45), மாதேஸ்வரன் (23), ரமேஷ் (51), பிரவீன்குமார் (24), சமுத்திர பாண்டியன் (26), வீரராக்கியத்தை சேர்ந்த தினேஷ் (30), வெங்கமேடு கலைஞர் காலனியை சேர்ந்த சரவணன் (25) ஆகியோர் நல்லாண்டவர் கோவில் அருகில் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பிரபு மற்றும் செல்வரத்தினம் ஆகியோர் அங்கு சென்று அவர்களை தட்டி கேட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 7 பேரும் பிரபு மற்றும் செல்வரத்தினத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டியதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வாகனங்கள் மற்றும் குமார் என்பவருடைய வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து நரேஷ், மாதேஸ்வரன், ரமேஷ், பிரவீன்குமார், சமுத்திர பாண்டியன், தினேஷ், சரவணன் ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
சிகிச்சை மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபு மற்றும் செல்வரத்தினம் ஆகியோரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை கோயில் கோபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான முருகனின் ஓவியம் கண்டுபிடிப்பு