கரூர் பேக்கரி அடிதடி சம்பவம்; 3 பேர் கைது, விசிக நிர்வாகிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு
ஒரு தரப்பு தாக்கும் வீடியோ மட்டும் வெளியான நிலையில் மீதமுள்ள தரப்பு தாக்கும் வீடியோவை வெளியிடவில்லை. தற்பொழுது கைது செய்யப்பட்டவர்களையும் எதிர் தரப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த தகராறில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மற்ற இளைஞர்களையும் கைது செய்யக் கோரி அக்கிராமத்தில் கடையடைப்பு நடத்தினர். எதிர் தரப்பு கிராமத்தினர் நீதி கேட்டு எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி கிராமத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த 8-ஆம் தேதி பாப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் டீ குடித்துக் கொண்டிருந்த போது, வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்கள் பேக்கரிக்கு முன்புறம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து, என்ஜினை அதிவேகத்தில் இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, வேப்பங்குடியை சேர்ந்த 2 இளைஞர்களும், தங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்களை பேக்கரிக்கு வரவழைத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய வேப்பங்குடியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து ஒரு வார காலம் ஆன நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி காணியாளம்பட்டி, மஞ்சநாயக்கன் பட்டி, செல்லாண்டி புரம், உடையாபட்டி, குளத்தூர், தரகம்பட்டி உள்ளிட்ட 7 கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகள் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தரகம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியதுடன், வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, வேண்டுமென்றே மாற்றுச் சமுதாய இளைஞர்கள் வம்பிழுத்து தாக்கியதாகவும், அதனால் தான் மற்ற இளைஞர்கள் வந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தும், பிரச்சினை தொடர்பாக சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் தங்கள் தரப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், ஜாதி மோதலுக்கு வழிவகுக்காமல் இப்பிரச்சினையை பேசி முடிக்க வேண்டும் எனக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாப்பனம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் கூறுகையில், மேலும் ஒரு தரப்பு தாக்கும் வீடியோ மட்டும் வெளியான நிலையில் மீதமுள்ள தரப்பு தாக்கும் வீடியோவை வெளியிடவில்லை, தற்பொழுது கைது செய்யப்பட்டவர்களையும் எதிர் தரப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களை டிஸ்சார்ஜ் செய்து காவல்துறையினர் அழைத்துச் சென்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் மற்றொரு தரப்பு தாக்குதல் நடத்தியதற்கு தற்போது வரை எந்த பதிலும் வழங்கவில்லை அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.