கரூர்: நொய்யல், ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
நீர்த்தேக்கத்திலிருந்து கீழ்பவானி அணைத்திட்ட பாசன நிலங்களில் இருந்து கிடைக்கும் கசிவுநீர் கீழ்பவானி வாய்க்கால் நொய்யல் ஆற்றைக் கடக்கும் பகுதியில் இருந்து முத்தூர் வரை நொய்யல் ஆற்றில் வடிகிறது.
கரூர் மாவட்டத்தில் நொய்யல், ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கரூர் மாவட்டம், புகளுர் வட்டம், ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் தற்போது உள்ள நீர்இருப்பு மற்றும் பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு பிரதான கால்வாயில் 60 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நொய்யல் பிரதான கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயில் 90 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நொய்யல், ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து கீழ்பவானி அணைத்திட்ட பாசன நிலங்களில் இருந்து கிடைக்கும் கசிவுநீர் கீழ்பவானி வாய்க்கால் நொய்யல் ஆற்றைக் கடக்கும் பகுதியில் இருந்து முத்தூர் வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு நொய்யல் ஆற்றில் வடிகிறது. இந்த கசிவுநீர் மற்றும் ஆற்றில் வரும் மழைநீரும் நொய்யல் ஆற்றில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சின்னமுத்தூர் அருகே உள்ள கதவணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து 10 கி.மீ நீளத்திற்கு ஊட்டுக்கால்வாய் மூலம் கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், கார்வழி கிராமத்தில் அமைந்துள்ள இந்நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காக தேக்கப்படுகிறது. தேக்கப்பட்ட நீர் பிரதான வாய்க்கால் மூலம் சென்று மொத்தம் 19480 ஏக்கர் புஞ்சை நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கிறது.
நீரியல் விவரங்கள், மண் அணையின் நீளம் 2850 மீட்டர், முழுநீர் மட்டம் 176.000,மீ, அதிகப்பட்ச நீர்மட்டம் 177.000 மீட்டர், நீர்தேக்க பரப்பளவு 163.30 ஹெக்டேர், முழு கொள்ளளவு 235.32 மி.கன.அடி, முடக்கப்பட்ட கொள்ளளவு 5.99 மி.கன.அடி, வழிந்தோடி கட்டிடத்தின் நீளம் : 41.00 மீட்டர், அதிகபட்ச வெள்ளநீர், வெளியேற்ற அளவு 3274 கன.அடி / வினாடிக்கும், தலைப்பு மதகின் இருப்பிடம் 2120 மீட்டர், தலைப்பு மதகின் மட்டம் 167.800 மீட்டர், தலைப்பு மதகின் அளவு 1.50 x 1.80 - (1எண்), வாய்க்காலின் நீளம்-57.427 கி.மீ, பாசனப் பரப்பளவு 19480 ஏக்கர், ஆகும். இன்றைய 06.09.2022 நீரியல் விவரங்கள், நீர் இருப்பு 228.167 / 235.52 மி.கன அடி, நீர் மட்டம் 175.780 மீ /176.000 மீ, நீரின் உயரம் 26.469 / 26.900அடி, நீர் வரத்து 63 கன அடி ஆகும்.
இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சை புகளூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சை கடம்பக்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்களில் உள்ள ஆயக்கட்டு பரப்புகள் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் பயனடைகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி பொறியாளர்கள் சதீஸ்வரன், குமரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்தி, புகளுர் நகராட்சி தலைவர் குணசேகரன், பள்ளப்பட்டி துணைத்தலைவர் தோட்டம் பசீர், கரூர் கோட்டாட்சியர் ரூபினா, புகளூர் வட்டாட்சியர் மோகன்ராஜ் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.