வாலாஜாபாத்: வெள்ளத்தால் துண்டிக்கப்படும் பாதைக்கு விடிவு! 75 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம்! நிம்மதியில் மக்கள்!
Walajabad Palar River high-level bridge "காஞ்சிபுரம் வாலாஜாபாத் பாலாற்றில் குறுக்கே, 75 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள உயர்மட்ட பாலத்திற்கு இம்மாத இறுதியில் டெண்டர் விடப்பட உள்ளது"

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யார் மற்றும் பாலாறு மிக முக்கிய ஆறுகளாக இருந்து வருகின்றன. இந்த ஆறுகளில் கடந்த ஒரு மாத காலமாக வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அவ்வப்போது வாலாஜாபாத் பாலாறு பாலத்தில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன.
போக்குவரத்து பாதிப்புக்கு காரணம் என்ன?
காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் பகுதியில், வாலாஜாபாத் - அவளூர் கிராமத்திற்கு செல்ல சுமார் 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு தரை பாலம் மட்டுமே இருக்கிறது. இந்த பாலம் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மிக முக்கிய பாலமாக இருந்து வருகிறது. இந்த பாலம் வழியாக தான் அங்கு இருக்கும் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், வேலை நிமிர்த்தமாகவும் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலம் மூலமாக, வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர். பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் இந்த, தரைப்பாலம் துண்டிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தரைப்பாலம் துண்டிக்கப்பட்டால் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
பொதுமக்களில் நீண்ட கால கோரிக்கை
கடந்த 2021 ஆம் ஆண்டு பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, தரைப்பாலும் பாதி பகுதி முழுமையாக சேதமடைந்தது. அப்போதே அப்பகுதி மக்கள் தரைப்பாலத்திற்கு பதிலாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அப்போது தரை பாலம் மட்டும் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து இடர்பாடுகளை தவிர்க்க, வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தாண்டும் பாராட்டில் வெள்ளப்பெருக்கு காரணமாக, இரண்டு முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பணிகளைத் தொடங்கிய நெடுஞ்சாலைத்துறை
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில், பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளது. இதற்கான மண் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் 15 மீட்டர் அகலம், 715 மீட்டர் நீளமுடைய உயர் மட்டபாலமாக கட்டப்பட உள்ளது.
விரைவில் டெண்டர்
இந்த உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக, 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இம்மாதம் இறுதியில் டெண்டர் விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் கட்டுமான பணிகளை துவங்க நெடுஞ்சாலைத்துறை நினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத்துறையில் சிறப்பு திட்டப் பிரிவு செய்ய உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ?
இந்த உயர்மட்ட பாலம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்தால், பாலாற்றில் வெள்ளம் செல்லும் போதெல்லாம் அப்பகுதி மக்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாலாஜாபாத் சென்று வர முடியும். இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள். உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் காப்பாற்றப்படும்.





















