இந்தியாவின் அசுத்தமான நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடம், சென்னை மூன்றாவது இடம்! ஸ்வச் சர்வேக்ஷன் அதிர்ச்சி!
Swachh Survekshan 2025 : "ஸ்வச் சர்வேக்ஷன் 2025 வெளியிட்ட அறிக்கையில், அசுத்தமான நகரங்களில் பட்டியலில் இந்திய அளவில் மதுரை முதலிடம் பிடித்துள்ளது"

"அசுத்தமான நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மதுரை முதலிடமும், சென்னை மூன்றாவது இடமும் பிடித்திருக்கிறது"
ஸ்வச் சர்வேக்ஷன் 2025
ஸ்வச் சர்வேக்ஷன் 2025 என்பது நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் இந்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக இருந்து வருகிறது. இந்த அமைப்பு வருடம் தோறும் இந்தியா முழுவதும் இருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அமைப்பு நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் ஜல் சக்தி அமைச்சகங்களால் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வானது "ஸ்வச் சர்வேக்ஷன்" மற்றும் "ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன்" என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் நகரங்கள் மற்றும் கிராமங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்கிறது.
ஆய்வறிக்கையின் நோக்கம் என்ன ?
இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் மிக முக்கிய நோக்கமாக, நகரங்களில் தூய்மை பட்டியல் வெளியிடப்படும். அதன் மூலம் முதலிடத்தை பிடிக்க நகரங்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி, தூய்மையான நகரத்தை உருவாக்கும் விதமாக இந்த ஆய்வு அறிக்கை நடத்தப்படுகிறது. நகர்ப்புற சுகாதாரம், பொது இடங்களின் சுகாதாரம், சுற்றுலாத் தலங்களின் சுகாதாரம் மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற பல பிரிவுகளில் நகரங்களின் செயல்திறன் மதிப்பிடப்படுகிறது.
அசத்துமான நகரங்கள் - மதுரை முதலிடம்
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லூதியானா, சென்னை மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ராஞ்சி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தில் மும்பை, ஒன்பதாவது இடத்தில் ஸ்ரீநகர் மற்றும் பத்தாவது இடத்தில் டெல்லி பிடித்துள்ளது. அசுத்தமான நகரங்களில் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மற்றும் சென்னை ஆகியவை முதல் 10 இடங்களில் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















