kamal haasan Covid Positive: நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கலா?
kamal haasan Tests Covid 19 Positive: நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதாக கமல் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் தன்னை மருத்துவனையில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ எனப்பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021
கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கமல்ஹாசன் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்பு தோன்றி, வீட்டில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை குறித்து கேட்டறிந்து. எந்த போட்டியாளர் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்பதையும் அவர் அறிவிப்பார்.
அதன்படி, நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50ஆவது எபிசோட் நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், நமது கைத்தறி நெசவாளர்களின் திறமையையும் வணிகத்தையும் பரப்புவதற்காக சிகாகோ சென்றிருந்ததாகவும், அவர்களின் கைத்திறமையை உலகச்சந்தையில் எடுத்துரைப்பதற்கான முயற்சி இது என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து இந்தச் சிந்தனை கிளம்பியதாகவும், இதற்கு முன்னுதாரணம் காந்தி என்றும், கண்ணெதிர் உதாரணமாக தனது தந்தை இருந்தார் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நபராக சென்ற இசைவாணி, நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்படார்.
முன்னதாக, அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன், இந்த எபிசோட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்ததும் நேரடியாக விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவர் நிகழ்ச்சியில் பேசும்போதே, தான் எங்கே சென்றாலும், தனது வேலையில் கடமை தவறாமல் இருப்பேன் என்று கூறி, இந்த எபிசோடில் நேரம் தவறாமல் கலந்துகொண்டுள்ளார். இந்த எபிசோட்டின் படப்பிடிப்பு ஒரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கமல்ஹாசன் உடன் நிகழ்ச்சியின்போது இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நமக்கு தெரிந்தவரை, நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் அருகில் இருந்தவர் இசைவாணி. ஷூட்டிங்கிற்கு முன்பாக பார்வையாளர்கள் அவரை சந்தித்து பேசியிருக்கலாம். இதனால், அவர்கள் எல்லாம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்.
இந்த நிகழ்ச்சியின் தூணாக விளங்குபவர் கமல்ஹாசன், அதன்காரணமாகவே இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் அவரே நடுவராக வருகிறார். தற்போது, கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், அவர் குறைந்தது இரண்டு வாரத்திற்கு மேல் தனிமையில் இருக்க வேண்டும். இதனால், இரண்டு வாரத்திற்கான நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற சிக்கல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பட்டுள்ளது.
எப்போதும் போட்டியாளர்களிடையே சிக்கல் ஏற்பட்டு அதனை தீர்ப்பவராக கமல்ஹாசன் இருப்பார். தற்போது அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவிற்கே தற்போது தலைவலியை கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்