ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
DMK Vs CM Vijay: பெரியார் அறிவுலகத்தில் AI மூலமாக ஊழல் நடந்திருக்கிறது எனப் பேசும் விஜய் தான் இன்னும் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுகிறாரா? முதல்வர் என திமுக கேள்வி.

மக்கள் பணத்தைத் தொட்டவர்களையும், பாலியல் பொறுக்கிகளையும், போதைக் கடத்தல்காரர்களையும், கொள்ளையர்களையும் பாதுகாக்கும் கிரிமினல் மாபியாதான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி என திமுக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்: பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில், ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் போல பேசியுள்ளார் ஆறே மாதங்களில் ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக மாறியுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அமமுக சட்டமன்ற உறுப்பினரைக் கடத்தி குதிரை பேரத்தில் ஈடுபட்ட உத்தமர் அல்லவா நம் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
ஆடு திருடியவர் எல்லாம் அரசு வழக்கறிஞர்
அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 15 இலட்ச ரூபாய் விலை நிர்ணயம் தொடங்கி, ஆடு திருடியவர் எல்லாம் அரசு வழக்கறிஞர், மின்சாரம் வாங்குவதில் முறைகேடு, 50 இலட்ச ரூபாய் வரை பாக்ஸ் டெண்டர், சைக்கிள் வாங்குவதில் ஊழல், ரேஞ்ச் ரோவர் கார் வாங்கி மாட்டுக் கொட்டகையில் மறைத்து வைத்திருக்கும் அமைச்சர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பெட்டி காட்டி பேரம் பேசியது, குட்கா புகழ் மாஜி மந்திரி விஜயபாஸ்கர் அவர்களை TVK Washing Machine-இல் போட்டு வெளுத்தது, மீன்வளத்துறை அமைச்சரின் கலெக்ஷன், கனிமவளத்துறை அமைச்சரின் தந்தை கல்லா கட்டுவது, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை மேற்கொள்ள 20 சதவீதம் கமிஷன் கேட்டு ஒப்பந்ததாரர்களை மிரட்டும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார், இடைத்தேர்தலில் ஜிபே மூலமாகப் பணப் பட்டுவாடா, பழனி கோயில் நில அபகரிப்பு என நாள்தோறும் ஊடகங்களில் த.வெ.க.வின் ஊழல் பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது.
தவெக செங்கல்பட்டு மாவட்ட இணைச் செயலாளர் இலட்சக்கணக்கில் இலஞ்சம் பெறும் வீடியோ வெளியாகித் தூயசக்தியின் இலட்சணம் சந்தி சிரித்ததே! சென்னையின் வணிக மையமாக விளங்கும் தியாகராய நகர் பகுதியில் ஆளுங்கட்சியினரின் வசூல் வேட்டை எத்தனை கோடி என முதலமைச்சருக்கு உளவுத்துறை இன்னும் சொல்லவில்லையா? இவ்வளவு ஏன்! நாமக்கல் கவிஞர் மாளிகையில் கடலைப் பார்த்தபடி கட்டப்படும் முதலமைச்சரின் புதிய அலுவலகத்துக்கு டெண்டர் விடாமலேயே பணிகள் தொடங்கப்பட்டது எப்படி?
எந்த party fund-க்குச் செல்கிறது?
இ-டெண்டர் விதிகளை அரசு தளர்த்தியிருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தலையங்கம் எழுதி விமர்சித்துள்ளதே! உங்கள் கூட்டணியிலும் அரசிலும் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அவர்களே, ”ஊழல் நடக்கிறது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என பகிரங்கமாகப் பேசி இருக்கிறாரே? பார்க்கவில்லையா. பாட்டிலுக்குப் பத்து ரூபாய் என்று பாட்டு பாடிய விஜயின் ஆட்சியில் இன்று பாட்டிலுக்கு 30 ரூபாய் வரையிலும், சில இடங்களில் 40 ரூபாய் வரையிலும் வசூலிப்பதாக தினசரி சமூக வலைத்தளங்களில் ஆதாரம் வெளியாகிறதே? இந்தப் பணமெல்லாம் எந்த party fund-க்குச் செல்கிறது?
அமைச்சர் ராஜ்மோகனே ஒப்புதல் வாக்குமூலம்
5000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள பிரேம் குமாரை முதலமைச்சர் விஜய் சந்தித்தது ஏன்? நாகையில் DRI அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள மெத் பூபாலனின் சட்டவிரோதப் பணம் 2026 தேர்தலில் த.வெ.க.வுக்காச் செலவிடப்பட்டதா இல்லையா? இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரா இல்லையா? யோக்கியனாக இருந்தால் இலஞ்சம் கொடுக்க முயன்றவர் மீது புகார் தந்து உள்ளே தள்ளி இருக்கலாமே, எதற்காக இப்போது வரை பெயரைக் கூறாமல் மறுக்கிறார்? அப்படி சொல்லிவிட்டால், இனி யாரும் இலஞ்சம் தர வரமாட்டார்கள் என்ற பயமா? ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் இத்தனை ஊழல்கள் புரிந்த சாதனையை இதுவரை எந்தக் கட்சியாவது படைத்திருக்குமா! இவர்கள் 5 ஆண்டுகளை நிறைவுசெய்தால் தமிழ்நாட்டையே சுரண்டித் தின்றிருப்பார்கள். தொட்டால் விடமாட்டேன் எனப் பேசியதெல்லாம் வெற்று வாய்ச்சவடால் என சாயம் வெளுத்து விட்டது.
கிரிமினல் மாபியா
மக்கள் பணத்தைத் தொட்டவர்களையும், பாலியல் பொறுக்கிகளையும், போதைக் கடத்தல்காரர்களையும், கொள்ளையர்களையும் பாதுகாக்கும் கிரிமினல் மாபியாதான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி. பெரியார் அறிவுலகத்தில் AI மூலமாக ஊழல் நடந்திருக்கிறது எனப் பேசும் விஜய் அவர்கள், தான் இன்னும் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுகிறாரா? அந்த ஊழலை விசாரித்துக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் பொறுப்பில் அவர்தானே இப்போது இருக்கிறார்? இதில் உரிய நடவடிக்கை கோரி தி.மு.கழகம் சார்பில் சட்டபிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன் உயர்நீதிமன்றத்தில் வழக்கே தொடுத்திருக்கிறார். அதனடிப்படையில்தானே, ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்? மடியில் கனமில்லாததால்தான் கழகமே நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. எனவே, முதலமைச்சர் விஜய் அவர்கள் தாம் வகிக்கும் பொறுப்பின் மாண்பை உணர்ந்து கொண்டும், தன் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆடி வரும் வசூல் வேட்டையைப் பற்றித் தெரிந்துகொண்டும் பொதுமேடைகளில் பேச வேண்டும். விரைவில் உங்கள் அமைச்சரவையில் இருந்தே பலர் மீது ஊழல் வழக்குகளில் சிக்கப் போவது உறுதி என திமுக விமர்சனம் செய்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























