"1000 டாஸ்மாக் கடைகளை நாளையே மூட வேண்டும்" : அண்ணாமலை
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த உயிர்களுக்கு மதிப்பு அளித்து நாளையே 1000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![Kallakurichi Illicit Liquor tamilnadu BJP Leader annamalai says 1000 tasmac shop close tommorrow](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/0f73cbb5ca9c65aa4d8b112fb25f8e451718882659798102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பலரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை கேட்ட அமித்ஷா:
இந்த நிலையில், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, நாங்கள் பார்த்த அந்த 25 குடும்பத்தில் நான்கைந்து குடும்பங்கள் மோடி வீடு வேண்டும், முத்ரா திட்டம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு திட்டத்தை கொண்டு செல்ல ஏ.ஜி.சம்பத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாம் கொடுக்கக்கூடிய 1 லட்சத்தை கடந்து, அவர்களது குடும்பத்தை வறுமையின் பிடியில் இருந்து கொண்டு வர பா.ஜ.க. முயற்சி செய்யும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என்னிடம் பேசினார்கள். நேரில் சந்தித்த பிறகு என்னிடம் அறிக்கை அளிக்க கூறியுள்ளார். இவர்களைச் சந்தித்த பிறகு தேசிய தலைவரிடமும், உள்துறை அமைச்சரிடமும் கள நிலவரம் குறித்து பேச உள்ளேன். அமித்ஷாவிடம் நான் வைக்கும் கோரிக்கை சி.பி.ஐ. விசாரணை இதற்கு கேட்க உள்ளேன்.
சி.பி.ஐ. விசாரணை:
கடந்த 3, 4 மணிநேரம் அனைத்து குடும்பங்களையும் பார்த்த பிறகு, கள்ளச்சாராயமும், தி.மு.க.வின் அடிமட்ட தலைவர்களும் பின்னிப் பிணைந்துள்ளனர். காவல்துறையினர் ஒரு வீட்டை சோதித்தபோது தி.மு.க. ஸ்டிக்கர் இருந்தது. அங்கு கள்ளச்சாராயம் இருக்கிறது. காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டரில் இந்த கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது.
யாரெல்லாம் கவலைக்கிடமாக இருக்கிறார்களோ? அவர்கள் எல்லாம் 3, 4 நாட்கள் குடித்திருப்பதற்கான அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கவலைக்கிடமாக இருப்பவர்கள் 3, 4 பாக்கெட்டுகள் வேறு, வேறு காலத்தில் அருந்தியதாக தெரியவந்துள்ளது. அப்படியென்றால் இது ஒரே நேரத்தில் நடந்ததாக தெரியவில்லை. இது சர்வசாதாரணமாக அனைத்து இடத்திலும் நடப்பதை பார்க்கிறோம். இதனால், அமித்ஷாவிடம் உடனடியாக கேட்பது சி.பி.ஐ. விசாரணை.
அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்:
கடந்த முறை செங்கல்பட்டு, மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தின் முதல் குற்றவாளிக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் தொடர்பை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டோம். கடந்தாண்டு முதலமைச்சர் கள்ளச்சாராயத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இதுதான் கடைசி என்றார். ஆனால், இன்று 38-ஐ கடந்து உயிரிழப்பு உள்ளது. 140க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ கல்லூரிக்கு வந்துள்ளனர். நான் பார்த்த வரை 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
முதலமைச்சர் ரொம்ப வருந்துகிறேன் என்றார். குறைந்தபட்ச இதற்கான அமைச்சர் முத்துச்சாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். முத்துச்சாமி என்ற தனிநபர் தவறு என்று கூறவில்லை. தி.மு.க. அரசின் தவறுக்கு ஒரு அமைச்சர் பொறுப்பேற்காவிட்டால் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு கட்டமாக மதுபான கடையை அகற்றுவோம் என்று கூறினர். ஆனால், இன்று டாஸ்மாக் வருமானம் 18 முதல் 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. அவர்களது பாலிசியே தோல்வி அடைந்துள்ளது.
1000 டாஸ்மாக் கடைகள்
உயிரிழந்த உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாட்டில் 1000 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று நாளையே அறிவிக்க வேண்டும். தி.மு.க. எம்.பி., சில நபர்களோ நடத்தும் சாராய ஆலை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் நடந்து கொண்டிருக்கிறது. தார்மீக பொறுப்பெடுத்து குறைந்தபட்சம் 1000 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்து, மதுவிலக்கு அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். முதலமைச்சர் தனிப்பட்ட முறையில் பொறுப்பெடுத்து நேரில் வந்து பார்க்க வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் வந்து பார்ப்பது அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. முதலமைச்சர் இதற்கு வராவிட்டால் எதற்கு வருவார்?
இவ்வாறு அவர் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)