Kalaignar Womens Assistance: மகளிர் உரிமைத் தொகை; செப்., 17இல் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். அதாவது தமிழ்நாடு அரசியல் முன்னோடியான பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி துவங்கப்படவுள்ள இந்த திட்டத்தை, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தொடங்கிவைக்கவுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான தகுதிவாய்ந்தவர்களை அடையாளம் காண, தமிழ்நாடு அரசு சார்பில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, சிறப்பு முகாம்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய ஆதார் அட்டம், மின்கட்டண ரசீது, குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), வங்கி பாஸ் புக் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்றதும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டு கைரேகை பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்படும். அப்படி, கைரேகை பதிவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் மூலம் சரிபார்க்கப்படும்.
மேலும், வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு வனத்துறையினர் உதவியுடன் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் எனவும், குடும்ப அட்டை இல்லாதவர்கள் குறித்து தனியாக பதிவு செய்யப்பட்டு, இல்லாத ஆவணங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - யாரெல்லாம் பெற முடியாது?
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு.
- சொந்தமாக கார், டிராக்டர், ஜூப், கனரக வாகனம் வைத்திருப்பவர்கள்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.
- ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது.
- 5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், 10 ஏக்கர் புன்செய் மற்றும் அதற்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை.
- பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.
- மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டும் இல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.
- வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது.
- ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களில் உள்ள மகளிருக்கு உரிமைத் தொகை கிடையாது.
- தொழிலில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி ஜி.எஸ்.டி செலுத்துவோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.