Magalir Urimai Thogai : பெண்களின் புத்தெழுச்சி.. மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழக அரசின் தன்னிகரில்லா சாதனை
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களின் வாழ்வில் புத்தெழுச்சியாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களின் வாழ்வில் புத்தெழுச்சியாக அமைந்துள்ளது.
குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையின்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வியலை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வரும் தமிழக அரசின், இந்த புதிய திட்டம் தங்களின் வாழ்வில் புத்தெழுச்சியாக அமைந்துள்ளதாக பயனடையும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மகளிருக்கான திமுக ஆட்சி:
இதுதொடர்பாக பேசிய பெண் ஒருவர், “மகளிரின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவதில், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது. அதில் முக்கிய பங்கு வகிப்பது முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி என்பது தவிர்க்க முடியாத உண்மை.
மகளிருக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது, மகளிருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியது, மகளிருக்கு உள்ளாட்சி மன்றங்களில் இடஒதுக்கீடு தந்தது, பொருளாதாரத்தில் மேம்பட மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தது போன்ற திட்டங்கள் கருணாநிதியின் ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் முதலமைச்சர் ஸ்டாலினும், உரிமைத் தொகை திட்டத்த செயல்படுத்தி இருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது” என பேசியுள்ளார்.
கருணாநிதி வழியில் ஸ்டாலின்:
மற்றொரு பெண் பேசுகையில், “கருணாநிதி மகளிருக்காக அன்று முன்னெடுத்த அதே முன்னேற்றப் பாதையில் தான் இன்று முதலமைச்சர் ஸ்டாலினும் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து தற்போது வரை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் எனப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் “தோழி” என்ற பெயரில் தங்கும் விடுதிகள் அரசின் சார்பில் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் திட்டத்தின் மூலம் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் வரிசையில் தற்போது குடும்ப தலைவிகளுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இனி நாங்கள் அனைத்து செலவுகளுக்கும் யாரோ ஒருவரது கையை எதிர்பார்க்கும் சூழல் நீடிக்காது “ என கூறினார்.
எதிர்காலத்திற்கான முதலீடு:
சென்னையை சேர்ந்த குடும்ப தலைவி ஒருவர் பேசும்போது, “மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயும், நாளைக்கான முதலீடே தவிர செலவு அல்ல என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நாளைய எதிர்காலமான இன்றைய மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக , புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே படித்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் வகையில், பேருந்துகளில் இலவச பயண திட்டம், சொந்த ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு என ”தோழி விடுதி” திட்டத்தின் மூலம் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், வேலைக்கு செல்லும் பெண்களின் செலவு குறைந்து, தங்களின் வருவாயில் ஒரு பங்கை சேமிக்கும் ஒரு வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி தந்தது.
பெண்களின் புத்தெழுச்சி:
வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் படித்து வரும் மாணவிகளுக்கு என மேற்கூறிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதேநேரம், கல்வியறிவு இல்லாத என்னை போன்ற பெண்கள் பலர் வீட்டிலேயே முடங்கி, ஒட்டுமொத்த குடும்ப பணிகளையும் செய்து வருகின்றனர். எங்களின் உழைப்பிற்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எனும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதனால், HOUSE WIFE தானே என எந்தவொரு பெண்ணையும் இனி யாராலும் ஏளானமாக கூற முடியாது. குடும்ப தலைவிகளுக்கான உரிமையாக வழங்கப்படும் இந்த ஆயிரம் ரூபாய், பெண்களின் வாழ்வில் புத்தெழுச்சியாக அமைந்துள்ளது” என மகிழ்ச்சி பொங்க பேசினார்.
மாணவிகள் தொடங்கி குடும்ப தலைவிகள் வரையிலும் அனைத்து தரப்பு பெண்களும் வாழ்வில் ஏற்றம் காண, தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு பயனாளிகளும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.