Sahitya Akademi: தமிழகத்தின் ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடெமி விருது
அன்றைய கால தமிழர்கள் வாழ்க்கை சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் ஆகியவை நாவலில் இடம்பெற்றிருந்தது.
![Sahitya Akademi: தமிழகத்தின் ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடெமி விருது Kala Pani novel by Rajendran conferred with Sahitya akademi know details Sahitya Akademi: தமிழகத்தின் ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடெமி விருது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/5cd420d84e5be70229351c34d686a3181671706050747224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய கால தமிழர்கள் வாழ்க்கை சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த நாவல் எழுதப்பட்டது. இந்த நாவலை முனைவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான மு. ராஜேந்திரன் எழுதியுள்ளார்.
1801 ஆம் ஆண்டு ஏறக்குறைய ஆறு மாதங்கள் காளையார்கோயில் காட்டில் நடந்த போர், 1857 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சிப்பாய்க் கலகம் போன்று, சொந்தப் பிரச்சனைக்காக அல்லாது, பொதுப் பிரச்சனைக்காக நடந்த போர்.
வெள்ளைய அதிகாரத்தை எதிர்த்த முதல் பெரும் போர். பெருந்திரளான போராளிகளுடன் தென்னிந்தியாவின் மிக நீண்ட நிலப்பரப்பில், பூனாவிலிருந்து நாங்குநேரி வரையிலான 1100 கிமீ தூரத்தை இணைத்து மக்களால் முன்னெடுக்கப்பட்டப் போர்.
யார் இந்த எழுத்தாளர் ராஜேந்திரன்?
டாக்டர் மு. ராஜேந்திரன் , மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகிலுள்ள வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர்.
ஐ.ஏ.எஸ். தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்து படித்தப் பிறகு, அவரின் முழு ஆர்வமும் வரலாற்றின்மீதே திரும்பியது. வரலாற்றைத் தேடி பயணிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவர்.
இயற்கைப் பாதுகாப்பு செயல்பாட்டாளர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராய் இருந்தபோது மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் பத்து லட்சம் விதைகளைத் தூவி, மலைவளம் காத்தவர்.
மாவட்டத்தில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகாலப் பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளைத் தொல்லியல்துறை உதவியுடன் படியெடுத்தவர்.
'திருக்குறளில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சட்டக்கூறுகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் 'முனைவர்' பட்டம் பெற்ற முதல் மாணவர். தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
ராஜேந்திரன் எழுதிய பிற நூல்கள்:
- சோழர் காலச் செப்பேடுகள்
- பாண்டியர் காலச் செப்பேடுகள்
- சேரர் காலச் செப்பேடுகள்
- பல்லவர் காலச் செப்பேடுகள்
- சட்ட வல்லுநர் திருவள்ளுவர்
- வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு ( தன்வரலாற்று நாவல் )
- பாதாளி (சிறுகதைகள்)
- 1801 (நாவல்)
- வந்தவாசிப் போர் 250
- கம்பலை முதல்... (இரு கட்டுரை நூல்களும் கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து எழுதியவை).
கடந்த ஆண்டு, எழுத்தாளர் அம்பைக்கு (லக்ஷ்மி) சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதைக்காக அம்பைக்கு, சாகித்ய அகாடமி அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)