Annamalai Delhi Visit: கூட்டணி முறிவு, பாஜக நிர்வாகிகள் கூட்டம்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை..?
முக்கிய முடிவுகள் தொடர்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் தேசிய தலைவர்களை சந்தித்து கூட்டணி மற்றும் தலைமை குறித்த முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வடக்கில் பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும் தென் இந்தியாவில் பாஜக எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. இதனால் தென்னிந்தியாவை குறிவைத்து பாஜக வேலை செய்து வருகிறது.
அந்த வகையில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
அதேபோல, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக திட்டமிட்டு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக, கடந்த ஓராண்டு காலமாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரண்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து அண்ணாமலை குறித்து புகார் அளிக்க நேரம் கேட்டனர். ஆனால் மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செப்டம்பர் 25-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது என முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், வலுவான கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஏற்கனவே, 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் எதிர்ப்பு மனநிலை நிலவி வருவதாகவும் தற்போது அதிமுக கூட்டணியில் விலகி இருப்பது அதற்கு மேலும் நெருக்கடியை தரும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி முறிவு தொடர்பாகவும், அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருப்பது குறித்தும், நடைபெற இருக்கும் நடாளுமன்ற தேர்தல் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக கட்சி தலைமையிடம் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.