Midhili cyclone: கரையை கடந்த மிதிலி புயல்.. அடுத்த 3 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
மிதிலி புயலானது வங்கதேசம் அருகே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'மிதிலி' புயலாக மேலும் வலுப்பெற்றது.
வியாழன் காலை 6 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சிட்டகாங் கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 625 கி.மீ தொலைவிலும், காக்ஸ் பஜார் கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 590 கி.மீ தொலைவிலும், மோங்லா கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், பைரா கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டது. இது மேலும் வடகிழக்கு நகர்ந்து தீவிரமடைந்தது.
முன்னதாக, இது வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வங்கதேச கடற்கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. சொன்னது போலவே, நேற்று பிற்பகலில் கரையை கடக்கத்தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்கதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே, புயலின் தாக்கம் காரணமாக, டாக்கா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 17, 2023
வங்கதேசம் அருகே கரையைக் கடந்த மிதிலி புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அடுத்த 3 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை:
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.11.2023: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.11.2023 மற்றும் 23.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.