’நியூட்ரினோ ஆய்வக அமைவிடம்’ : கேள்விக்குறியாகும் புலிகளின் பாதுகாப்பு..!
நியூட்ரினோ ஆய்வகத்தின் குகைப் பகுதியானது முற்றிலுமாக மதிகெட்டான் – பெரியார் புலிகள் வலசைப் பாதையில் வருகிறது. இந்தப் பாதையை கேரள மாநில வனத்துறையானது தனது பெரியார் புலிகள் காப்பக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்திருப்பதால் இத்திட்டத்திற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி அவசியமாகும்
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வக மையத்திற்கு காட்டுயிர் அனுமதிகோரி (Wildlife Clearance) டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) தமிழ்நாடு வனத்துறையிடம் கடந்த மே மாதம் விண்ணப்பம் செய்திருந்தது. இத்திட்டம் அமையவுள்ள இடம் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமென்பதால் இந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
தேனியில் இத்திட்டத்தை அமைக்க 2010-ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு முயன்று வருகிறது. இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பூவுலகின் நண்பர்கள் என்கிற அமைப்பின் சார்பில் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இறுத் தீர்ப்பில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்றும் ஆனால், இத்திட்டமானது மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவிற்கு மிகவும் அருகில் வரவுள்ளதால் தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியில்லாமல் (NBWL) திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் கிழக்கு மற்றும் வட கிழக்கு எல்லைகளை தவிர்த்து பிற பகுதிகளில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவித்தது. இந்த கிழக்கு பகுதியில்தான் நியூட்ரினோ அமைவிடம் உள்ளது. இதன் காரணமாக இத்திட்டத்திற்கு காட்டுயிர் வாரிய அனுமதி தேவையில்லை என்கிற நிலை உருவானது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய அம்சமான குகைப்பகுதியானது முற்றிலுமாக மதிகெட்டான் – பெரியார் புலிகள் வலசைப் பாதையாக கண்டறியப்பட்ட பகுதியினுள் வருவதை அறிந்தனர். இதனையடுத்து தான் புதிதாக காட்டுயிர் வாரிய அனுமதிகோரி கடந்த மே 20ஆம் தேதி தமிழ்நாடு வனத்துறையிடம் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 2014ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த 32 புலிகள் வலசைப் பாதைகளை கண்டறிந்து ”Connecting Tiger Populations For Long-Term Conservation” என்கிற ஆவணமாக வெளியிட்டிருந்தனர். இந்த ஆவணத்தின் படி பார்த்தால் நியூட்ரினோ ஆய்வகத்தின் குகைப் பகுதியானது முற்றிலுமாக மதிகெட்டான் – பெரியார் புலிகள் வலசைப் பாதையில் வருகிறது. இந்தப் பாதையை கேரள மாநில வனத்துறையானது தனது பெரியார் புலிகள் காப்பக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்திருத்திருப்பதால் இத்திட்டத்திற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி அவசியமாகும். பெரியார் புலிகள் காப்பகத்தின் பாதுகாப்புத் திட்டத்தின் கால அவகாசம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதால் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை அனுமதிக்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைத்திற்கு கேரள மாநில வனத்துறை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஆணையத்தின் அனுமதிக்குப் பின்னர்தான் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றார் பெரியார் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் சுனில்பாபு.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் உலகின் 70% புலிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் இதுபோன்ற வலசைப் பாதைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு புலிகள் வாழ்விடங்களை இணைக்கும் பகுதியாக இந்த பாதைகள் இருப்பதால்தான் புலிகளின் இனப்பெருக்கத்திற்கு இது முக்கியமானது என்கின்றனர் காட்டுயிர் ஆர்வலர்கள். இப்படியான ஒரு பாதையில் புலிகளின் நடமாட்டம் இல்லை என்றாலும் கூட மற்ற பகுதிகளை விட அதிக கவனத்தை இந்த பாதைகளில் செலுத்தி புலிகள் நடமாடும் அளவிற்கு அந்தப் பாதையின் தரத்தை உணர்த்த வேண்டும் என்கின்றனர் Wildlife Institute of India வைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜனிடம் கருத்து கேட்டபோது “ மேற்குத் தொடர்ச்சி மலையில் 6 லட்சம் டன் பாறைகளை 450 டன் டைனமைட் வெடிவைத்து தகர்த்து மலையைக் குடைந்து குகை அமைப்பது நிச்சயம் புலிகள் பாதைக்கும் அதைச் சுற்றியுள்ள காட்டுயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு என்ன விதமான பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவதற்கான Environment Impact Assesment கூட டாடா நிறுவனம் செய்யவில்லை “ எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு அவ்வித அனுமதியையும் வழங்கக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் அறிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டம் குறித்த ஆவணங்களோடு சுற்றுச்சூழல், வனத்துறை அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார். விரைவில் இதுகுறித்து தமிழ்நாடு முடிவெடுக்க உள்ளதாகவே தெரிகிறது.
2018ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு எதிராக மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரைக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்ட நடைபயணம் ஒன்றை அப்போதைய திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்திருந்தார் என்பது குற்ப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து கேட்பதற்காக நியூட்ரினோ ஆய்வு மையத்தின் இயக்குனர் கோபிந்தா மஜும்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. விரைவில் அவர் கருத்து பெறப்பட்டால் இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்படும்.